டென்னிஸ்

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லினெட்- லிண்டா இன்று பலப்பரீட்சை

Update: 2022-09-18 06:33 GMT
  • இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் மக்டா லினெட் (போலந்து) லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.
  • இளம் வீராங்கனையான லிண்டா முதல் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தப் போட்டியில் 3-வது வரிசையில் உள்ள மக்டா லினெட் (போலந்து)- கேத்தே சுவான் (இங்கிலாந்து) மோதினார்கள். இதில் லினெட் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது கேத்தே காயத்தால் விலகினார். இதனால் மக்டா லினெட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்றொரு அரையிறுதியில் லிண்டா புருவர்தோவா (செக்குடியரசு) 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் நாடியா போடோரோவை (அர்ஜென்டினா) கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தினார்.

இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் மக்டா லினெட் (போலந்து) லிண்டா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.

3-ம் நிலை வீராங்கனையான மக்டா லினெட் இதுவரை 2 டபிள்யூ. டி.ஏ. பட்டத்தை பெற்றுள்ளார். சென்னை ஓபன் போட்டியில் வெற்றி பெற்று அவர் 3-வது பட்டத்தை வெல்வாரா? என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

30 வயதான மக்டா தற்போது உலக தரவரிசையில் 66-வது இடத்தில் உள்ளார். 2020-ம் ஆண்டில் அவர் 33-வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். கிராண்ட்சிலாம் போட்டியை பொறுத்தவரை மக்டா லினெட் 3-வது சுற்று வரை நுழைந்ததே சிறப்பாகும்.

ஒட்டு மொத்த டென்னிஸ் போட்டியில் 403 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். 309 போட்டியில் தோற்றுள்ளார்.

இந்த போட்டியில் 28-வது வரிசையில் உள்ள லிண்டா மிகவும் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். 17 வயதான அவர் உலக தர வரிசையில் 130-வது இடத்தில் உள்ளார். இளம் வீராங்கனையான லிண்டா முதல் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

முன்னதாக நடைபெறும் இரட்டையர் இறுதி போட்டியில் டாப் ரோஸ்கி (கனடா)-ஸ்டெபானி (பிரேசில்) ஜோடியுடன் லின்கோவா (ரஷியா)- ஜலாமிட்ஸ் (ஜார்ஜியா) ஜோடி மோதுகிறது.

Tags:    

Similar News