டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், ரைபகினா முன்னேற்றம்
- ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போராடி தோற்றார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இரு ஆட்டங்களில் அரினா சபலென்கா, இகா ஸ்வியாடெக் நீடிக்கிறார்கள்.
நியூயார்க்:
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபனை வென்று வரலாறு படைத்த கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) முதலிடத்திலும், ஜானிக் சினெர் (இத்தாலி) 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்து போராடி தோற்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் டாப்-3 இடத்திற்குள் வருவது 2024-ம் ஆண்டு ஆகஸ்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதனால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் குறைந்து 4-வது இடத்துக்கு இறங்கினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இரு ஆட்டங்களில் அரினா சபலென்கா (பெலாரஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து) நீடிக்கிறார்கள். ஆஸ்திரேலிய ஓபனில் மகுடம் சூடிய எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 2 இடங்கள் முன்னேறி தனது சிறந்த நிலையாக 3-வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவின் கோகோ காப் 3-ல் இருந்து 5-வது இடத்துக்கு சரிந்தார். ஆஸ்திரேலிய ஓபன் மூலம் கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக கால்இறுதியை எட்டிய அமெரிக்க 'இளம் புயல்' இவா ஜோவிச் 7 இடங்கள் உயர்ந்து 20-வது இடத்தை பெற்றுள்ளார்.