அறிந்து கொள்ளுங்கள்

ஒடிடி "Renewal" செய்தது குற்றமா? முதியவரிடம் ரூ. 1.22 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பல்!

Update: 2022-12-03 06:58 GMT
  • மும்பையில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிக்க முயன்ற முதியவர் சைபர் மோசடியில் சிக்கி இருக்கிறார்.
  • இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்கள் 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒடிடி தளங்களில் ஒன்றாக நெட்ஃப்ளிக்ஸ் இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர் ஒருவர் சந்தாவை புதுப்பிக்க முயன்று சைபர் மோசடியில் சிக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த மோசடியில் மும்பையை சேர்ந்த முதியவர் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய புகார் மும்பையை அடுத்த ஜூஹூ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

காவல் நிலைய தகவல்களின் படி, முதியவருக்கு நெட்ஃப்ளிக்ஸ் ஆட்டோ-ஜெனரேட் செய்த மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிப்பதற்கான நினைவூட்டல் தொடர்பான தகவல் இடம்பெற்று இருந்தது. அதில் அவர் மாதாந்திர கட்டணமான ரூ. 499 செலுத்தி ஸ்டிரீமிங் சந்தாவை புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மின்னஞ்சலுடன் வந்த இணைய முகவரியை 73 வயதான நபர் க்ளிக் செய்துள்ளார்.

இவர் க்ளிக் செய்ததும் திறந்த மற்றொரு வலைப்பக்கத்தில் இவரின் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட கேட்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்து நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்-ஐ புதுப்பிக்கலாம் என்றும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பின் இவரது மொபைல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒடிபி) அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கான குறுந்தகவலில் தொகையை சரியாக பார்க்காமல், முதியவர் ஒடிபி-யை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு செய்ததும், அவரின் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் உடனடியாக காணாமல் போய்விட்டது.

சைபர் செக்யுரிட்டி வல்லுனர்கள், சட்ட நிறுவனங்கள் பொது மக்களிடம் ஒடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும், இது போன்ற சைபர் குற்றங்களுக்கு மக்கள் தொடர்ந்து பலியாவது வாடிக்கையாகவே உள்ளது. இந்த சம்பவத்தில் வங்கி சார்பில் இவ்வளவு பெரிய தொகைக்கான பரிவர்த்தனையை உண்மையில் நீங்கள் செய்தீர்களா? என்ற கேள்வியுடன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த அழைப்பில் தான் முதியவர், ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார். இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்களை பற்றிய தகவல் தெரிவிக்கும் முனையத்தில் புகார்களின் எண்ணிக்கை 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது பற்றிய தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

Tags:    

Similar News