முன்பதிவில் அமோக வரவேற்பை பெற்ற கேலக்ஸி S23 சீரிஸ்
- சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் தனது புதிய கேலக்ஸி S23 ஃபிளாகேஷிப் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
- ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே புதிய கேலக்ஸி S23 சீரிசில் S23, S23 பிளஸ், S23 அல்ட்ரா மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று மாடல்கள் புதிய கேலக்ஸி S23 சீரிசில் இடம்பெற்றுள்ளன. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு சமீபத்தில் துவங்கியது.
இந்த நிலையில், முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என சாம்சங் அறிவித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களுக்கு கிடைத்த முன்பதிவை விட இருமடங்கு அதிகம் ஆகும்.
புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுக்கு இருமடங்கு அதிக முன்பதிவுகள் கிடைத்திருப்பது, இவற்றுக்கான வரவேற்பு அதிகமாக இருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் சராசரி விற்பனை விலை ரூ. 1 லட்சம் ஆகும். அந்த வகையில், இதன் மூலம் சாம்சங் நிறுவனம் ரூ. 1400 கோடி மதிப்பிலான வருவாயை எட்டி இருக்கும்.
சாம்சங் சொந்த நிதி திட்டம் கடந்த வாரம் 12 ஆயிரத்தில் இருந்து இந்த ஆண்டு 18 ஆயிரம் அஞ்சல் குறியீடுகளுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 40 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் ஸ்டோர்களாக அதிகரித்து இருக்கிறது. முன்பதிவில் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், சாம்சங் சந்தையில் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கேலக்ஸி S23 சீரிஸ் யூனிட்களும் இந்தியாவில் உள்ள நொய்டா உற்பத்தி ஆலையிலேயே உற்பத்தி செய்யப்படும் என சாம்சங் அறிவித்து இருக்கிறது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் விற்பனை துவங்கிய முதல் நாளிலேயே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் யூனிட்களை கிடைக்க செய்ய முடியும்.