இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஃப்ளிப் போன் விவரங்கள்
- மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஃப்ளிப் போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
- புதிய மோட்டோ ஃப்ளிப் போன் மோட்டோரோலா ரேசர் பிளஸ் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் 2023 ரேசர் பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. சீனாவில் விற்பனை செய்வதற்கான சான்றுகளை இந்த ஸ்மார்ட்போன் பெற துவங்கி இருப்பதை அடுத்து விரைவில் இது அந்நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் சீனாவின் CQC சான்றளிக்கும் வலைதளத்தில் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்று இருந்தது.
அதில் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன், ஃபாஸ்ட் சார்ஞ்சிங் திறன் உள்பட பல்வேறு விவரங்கள் தெரியவந்தது. இந்த வரிசையில், தற்போது மோட்டோ ரேசர் பிளஸ் 2023 விவரங்கள் TDRA மற்றும் கனடாவின் REL வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. TDRA மற்றும் REL வலைதள விவரங்களின் படி மோட்டோரோலா ரேசர் பிளஸ் 2023 மற்றும் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் ஒரே மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், இரு மாடல்களும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். சான்றளிக்கும் வலைதளங்களில் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் இடம்பெறாது. அந்த வகையில், ஏற்கனவே CQC வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் பிளஸ் 2023 மாடலில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என்றும் இதில் அதிகபட்சம் 3640 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மோட்டோ ரேசர் பிளஸ் 2023 மாடலுடன் முதல் முறையாக மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா விவரங்கள் வெளியாகி இருக்கிறது. சீன சந்தையில் மோட்டோ ரேசர் பிளஸ் 2023 மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.