null
Vinayagar Agaval தோன்றிய வரலாறு
- ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார்.
- ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார்.
புராண காலத்தில் திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் என்ற மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மிகவும் நெருங்கிய நண்பராவார்.
ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வை முடித்து சிவனை தரிசிக்க கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானை புகழ்ந்து பாடி வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச்செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார்.
சுந்தரரும் யானைமீது ஏறி ஆகாய மார்க்கமாக கயிலாயம் புறப்பட்டார். இதனை அறிந்த மன்னன் சேரமான் பெருமாள் வானத்தில் இந்த அதிசயத்தை பார்த்தார். அவருக்கு சுந்தரரை பிரிய மனமில்லாமல் அவருடன் தானும் கைலாயம் செல்லும் நோக்கில் தன் குதிரையில் ஏறி அதன் காதில் "சிவயநம" என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் சுந்தரரைத் தொடர்ந்து கைலாயத்தை நோக்கி புறப்பட்டது.
இவ்வாறு ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்த சுந்தரரும், சேரமான் பெருமாளும், ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி" என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப்பிராட்டி பதில் அளித்தார்.
ஔவை பிராட்டி தானும் அவர்களுடன் கயிலை மலைக்குச் சென்று, சிவதரிசம் பெற எண்ணினார். அதனால் பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.
ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை செய்வாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார்.
ஔவையாரும் மனமகிழ்ந்து விநாயகர் பூஜையை வழமை போல சிறப்பாக செய்து முடித்தார். பூஜையினால் அகமகிழ்ந்த விநாயகர் யோகத்தை (யோக மார்க்கம் மூலமாக முத்தியடையும் வித்தை) ஔவையாருக்கு எடுத்துக் கூற, ஔவையார் அதனை "விநாயகர் அகவல்" என்ற நூலாக இவ்வுலகுக்கு அருளினார்.
இறுதியில் விநாயகர் தன் துதிக்கையினால் ஔவையாரை தூக்கி கைலையில் சேர்த்தார். ஔவையாரும் கயிலை காட்சி கண்டு சிவனுடன் இணைந்தார் என புராண கதைகள் கூறுகின்றன.