வழிபாடு

நாளை வரலட்சுமி வழிபாடு- விரதமுறை

Published On 2025-08-07 12:08 IST   |   Update On 2025-08-07 12:08:00 IST
  • அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது.
  • விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்-செல்வ வளம் சேரும்.

வரலட்சுமி விரதம் இருக்க வீடு அல்லது கோவில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.

சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம், குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேசபூஜை செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள் கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும். நைவேத்தியமாக கொழுக்கட்டை படைக்கலாம்.

பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்- செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் உண்டாகும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித செல்வங்கள் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும்.

Tags:    

Similar News