null
கந்தன் அருள்சுரக்கும் சஷ்டி விரதம் - தேச மங்கையர்க்கரசி
- கவலைகளுக்கான காரணம் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான காரணங்கள்.
- பக்குவம் வருவதற்கு துணை செய்வது இந்த கந்த சஷ்டி விரதம்.
முருகப் பெருமான் அருளைப் பெறுவதற்கு வைகாசி விசாகம், தைப்பூசம், மாத சஷ்டி, கிருத்திகை என எத்தனையோ விரதங்கள் இருப்பினும் அதற்கெல்லாம் மணி மகுடம் போல இருப்பது மகா கந்த சஷ்டி விரதம். ஆம்! தீயவை அழியும் நல்லது நிலைத்திருக்கும் என்பதற்கு உதாரணமாக சூரபதுமன் அழிந்து தேவர்கள் வாழ்வு பெற்ற அந்த நிகழ்வினை நாம் சூரசம்ஹாரம் என்று கொண்டாடி வருகிறோம்.
தற்போது நாமும் சூரபதுமன் போன்ற கொடிய, தீய குணங்களால் சூழப்பட்டிருக்கிறோம். அதனைப் போக்குவதற்கு ஒரே வழி கந்தக் கடவுளிடம் சரணடைவதே. அதிலும் இந்த மகா கந்த சஷ்டி விரதம் என்பது நமது அகப் பகை மற்றும் புறப் பகைகளை அடியோடி நீக்கி நமக்கு நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது.
மகா கந்த சஷ்டி எல்லா முருகப் பெருமானின் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் திருச்செந்தூரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவதற்கான காரணம் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்வதற்கு முன் இங்கு படை வீடு அமைத்து தங்கினார். சூரனை சம்ஹாரம் செய்த பின்னரும் பஞ்ச லிங்கங்கள் அமைத்து தனது தந்தையான சிவபெருமானை இத்தலத்தில்தான் முருகப்பெருமான் வழிபட்டார். எனவே திருச்செந்தூரில் நடைபெறும் சூர சம்ஹாரம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
உலகெங்கும் இருந்து பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து கடலில் நீராடி, பின் முருகன் வேலினால் உண்டாக்கிய நாழிக்கிணற்றிலும் நீராடி, பச்சை நிற ஆடை உடுத்தி, 6 முதல் 7 நாட்கள் தங்கி விரதம் இருந்து தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறப் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பச் செல்கிறார்கள்.
தேச மங்கையர்க்கரசி
முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு அடுத்த நாளில் தன்னிடம் இருந்து பிரிந்திருந்த இச்சா மற்றும் கிரியா சக்தியான வள்ளி, தெய்வானையை மணம் புரியும் நாளாகிய 7-ஆம் நாளில் அதாவது வள்ளி தேவசேனா திருக்கல்யாண தினத்தில் விரதம் நிறைவு செய்வது மிகவும் சிறப்பானது என்று எனது குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகள் சொல்லுவார்கள். ஏனென்றால் திருமணக் கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் புரியும் விதமாக முருகப் பெருமான் காட்சி தரும் நேரத்தில் நாம் எதற்காக விரதம் இருந்தோமோ அது 100% நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மகா கந்த சஷ்டி விரதமானது கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என உறுதியிட்டு சொல்லும் அளவுக்கு நற்பலன்களை அள்ளித்தரும் விரதம். முருகன் என்றாலே இளமை. இளமை என்றால் அழகு. புற அழகல்ல அக அழகு. மனதில் கவலை இல்லாமல் இருக்கும்போதுதான் அகமும், புறமும் அழகாக இருக்கும்.
கவலைகளுக்கான காரணம் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான காரணங்கள். வேலை, திருமணம், குழந்தைப்பேறு, வறுமை, நோய் போன்ற பல காரணங்களால் பலரும் அல்லல் உற்று மனக்கவலைகளுடன் வாழ்கின்றனர். அந்த மனக் கவலைகளை தீர்க்கும் மாமருந்தே முருகன்தான். முருகனிடம் நம் கவலைகளை எல்லாம் சொல்லி சரணாகதி அடைந்து இந்த கந்த சஷ்டி காலத்தில் வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.
எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.
குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பெற்றோரின் இல்லம் தேடி வந்து தங்கி இருந்து தன் பிரச்சனைகளை சொல்லி அதற்கான தீர்வைக் கண்டு திரும்புவது பிள்ளைகளின் வழக்கம். நமக்கு முருகனே தாயும், தந்தையும்; நாம் அனைவரும் அவருக்கு பிள்ளைகள்; அவன் உறையும் இடமே நாம் கதி என செல்லும் வீடு. இந்த சஷ்டி காலத்தில் செந்திலம்பதி என்ற வீட்டில் வந்து தங்கியிருந்து தனது துன்பங்களை எல்லாம் அவனிடம் சொல்லி அதைத் தீர்க்க வழியும் கண்டறிந்து திரும்பும் பிள்ளைகளாகவே நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம். முருகனின் பதம் பணியாமல் வாழ்பவர்களை அருணகிரிப் பெருமான் கடுமையாகவே சாடுகிறார்.
'கோழிக்கொடியன் அடிபணியாமல் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய்
ஊழின் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம்
ஆழப்புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப் பிறகே?'
முருக வழிபாடு என்பது அருணகிரிநாதரைப் பொறுத்தவரை ஒரு சாதாரண வழிபாடு மட்டுமல்ல. முருகனே எல்லாம் என்ற சரணாகதி நிலை வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். அந்த பக்குவம் வருவதற்கு துணை செய்வது இந்த கந்த சஷ்டி விரதம்.
தங்கத்தை ஆபரணம் ஆகும் வரை அடித்து துன்புருத்தினால்தான் அது விலை மதிப்பு பெறும். அடிக்கு பயந்து அது மண்ணிலேயே இருந்து விட்டால் அதன் மதிப்பு இழந்து போகும். முருகனை வழிபட்டால் சோதிக்கின்றானே என்று சொல்பவர்களுக்குத்தான் இந்த வரிகள். சோதனைக்கு உட்பட்டால்தான் மாணவன் மருத்துவன் ஆகலாம், விஞ்ஞானி ஆகலாம், பொறியாளர் ஆகலாம். சோதனையைத் தவிர்க்க நினைப்பவன் அறிவற்ற வனாகவே இருப்பான்.
வருவது வரட்டும், வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. குகனுண்டு குறைவில்லை என்று சொல்லி கந்தன் கழலடியே கதி என்று நம்பி வருவோரை அவன் வாரி அனைத்து அருளை மாரி எனத் தருவதில் செந்தில் ஆண்டவர் வல்லவர். தேவர் சிறை மீட்ட வேலன் நம்மையும் காத்து அருளும் பாலன். இந்த சஷ்டி காலத்தில் அவரை வழிபட்டு எல்லோரும் எல்லா நலனும் பெற்று மகிழலாம்.