வழிபாடு

வாழ்வில் ஒளி தரும் ரத சப்தமி - வழிபாடும் பலன்களும்

Published On 2026-01-24 12:05 IST   |   Update On 2026-01-24 12:05:00 IST
  • ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு.
  • சூரியனுக்கு உகந்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.

ரத சப்தமி என்பது இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். அமாவாசைக்குப் பிறகு வரும் 7-வது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். தை அமாவாசைக்குப் பிறகு வரும் சப்தமி திதி 'ரத சப்தமி' என்று அழைக்கப்படுகிறது. இது சூரியன் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. எனவே இந்த நாளை 'சூரிய ஜெயந்தி' என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் சூரிய பகவானை வழிபட்டால் பலவிதமான நன்மைகளை பெறலாம்.

காஷ்யப முனிவரின் மனைவியர்களில் ஒருவர் அதிதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஒரு சமயத்தில், கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டின் வெளியே ஒரு அந்தணர், "மிகவும் பசியாக இருக்கிறது. உணவு இருந்தால் கொடுங்கள்" என்று யாசகம் கேட்டு நின்றார். நிறைமாத கர்ப்பிணி என்பதால் கணவருக்கு உணவு பரிமாறிவிட்டு, மெதுவாக உணவு எடுத்து வந்து யாசகரிடம் கொடுத்தார்.

அப்போது கோபம் அடைந்த யாசகர், "உணவு எடுத்துவர இவ்வளவு தாமதமா? என்னை அவமானம் செய்துவிட்டாய். எனவே உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என்று சாபமிட்டார். இதனால் பயந்து போன அதிதி, இது பற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். அவரோ, "கவலைப்படாதே, நமக்கு தேவலோகத்தில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் கிடைப்பான்" என்று கூறினார். அதன்படி, அதிதிக்கு மகனாக பிரகாசமான ஒளியுடன் சூரியன் பிறந்தார். இந்த தினமே 'ரத சப்தமி' ஆகும்.

இந்த ஆண்டு ரத சப்தமி மார்கழி மாதம் 11-ம் நாள் (25-1-2026) நாளை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருபவர், சூரிய பகவான். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபாடு செய்வதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். சூரியனுக்கு உகந்ததாக எருக்கம் இலை உள்ளது. ரத சப்தமி அன்று, ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராட வேண்டும். இதனால் ஆரோக்கியமும், செல்வ வளமும் உண்டாகும் என்கிறார்கள்.

 

ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் இருந்தால் அடுத்து வரும் பிறவிகளில் முன்னேற்றங்கள் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். இந்த நாளில் தியானம், யோகா செய்வது சிறந்தது.

ரத சப்தமியில் சூரிய உதயத்தின்போது குளித்து விரதம் இருந்தால் செல்வந்தராக உயர்வார்கள் என்கின்றது புராணம். அன்றைய தினம் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சூரியனாருக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது சிறப்பு.

 

அன்றைய தினம் குளித்து முடித்தபின் சூரியனை வணங்க வேண்டும். அதன்பின் சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும். சூரியனுக்கு உகந்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல். எனவே சூரிய பகவானுக்கு பொங்கல் நைவேத்தியம் படைத்து, பின்பு அதை பிறருக்கு கொடுப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது வழக்கம்.

திருமாலின் அம்சமே சூரியன் என்பதால் ரத சப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பெருமான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளையும், குறையாத ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர்.

சூரிய பகவானை ரத சப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, 'ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா!' என்று சொல்லி வணங்கலாம். சூரியனை பொங்கல் அன்றும், ரத சப்தமி நாளிலும் மட்டும் வணங்காமல் தினமும் வழிபட்டு வாழ்வில் தீவினை என்னும் இருள் விலகி, நன்மை என்னும் ஒளி பரவ செய்வோம்.

Tags:    

Similar News