ஆரோக்கியம் அருளும் ரத சப்தமி வழிபாடு
- சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கன் இலைக்கு உண்டு.
- நாம் அளிக்கும் பச்சரிசியை ஒரு எறும்பு சாப்பிட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிடைக்கும்.
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி.
சூரிய பகவான் தனது 7 குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி திருப்பிப் பயணத்தைத் தொடங்கும் புனித நாளே 'ரத சப்தமி'. தை மாத வளர்பிறை சப்தமி திதியில் கொண்டாடப்படும் இந்த நாள், சூரிய பகவானின் பிறந்த நாளாகவும் (சூரிய ஜெயந்தி) போற்றப்படுகிறது.
இந்த ஆண்டு ரத சப்தமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. சப்தமி திதி நாளை அதிகாலை 12:39 மணிக்கு தொடங்கி இரவு 11:10 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி அதிகாலை 4:56 முதல் 6:36-க்குள் புனித நீராடுவது நல்லது.
ரத சப்தமி அன்று மிக முக்கியமான வழிபாடு 'எருக்கன் இலை' வைத்து நீராடுவது ஆகும். ஆண்கள் 7 எருக்கன் இலைகளுடன் அட்சதை மற்றும் விபூதி வைத்து நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கன் இலைகளுடன் அட்சதை மற்றும் மஞ்சள் தூள் வைத்து நீராட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் கடந்த 7 ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்பதும், தீராத நோய்கள் குணமாகி ஆரோக்கியம் மேம்படும் என்பதும் ஐதீகம். அர்க்கன் என்றால் சூரியன் என்று பொருள். அர்க்கன் இலை என்பதே மருவி எருக்கன் இலை என மாறிவிட்டது.
சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கன் இலைக்கு உண்டு. சூரிய கதிர்களில் உள்ள நல்ல சக்திகளை உடலுக்குள் செலுத்தும். தீபாவளியன்று நீராடுவது எவ்வளவு விசேஷமானதாக கருதப்படுகிறதோ அதேபோல, ரத சப்தமி நீராடலும் முக்கியமானது.
ரத சப்தமி அன்று வாசலில் சூரிய ரதம் போன்ற கோலமிட்டு, அதன் நடுவில் சூரிய-சந்திரர்களை வரைய வேண்டும். சூரிய ஒளிபடும் இடத்தில் புதுப்பானையில் பால் பொங்க வைத்து, சர்க்கரைப் பொங்கல் மற்றும் உளுந்து வடை நிவேதனம் செய்வது சிறப்பு.
இந்த உலகில் தோன்றிய பழமையான வழிபாடுகளில் ஒன்று சூரிய வழிபாடு. கண்கண்ட கடவுளாக நாள்தோறும் தோன்றி மறைந்து உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஒளியையும் உணவையும் அருள்பவர் சூரியன்.
சிவனும் நாராயணனும் சூரிய வடிவிலே துதிக்கப்படுவது வழக்கம். தெய்வங்களில் நாராயணனைப் போன்று சங்கு சக்கரம் தரித்தவர் சூரியபகவான். 7 குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அவர் வலம் வருவதாகப் புராணங்கள் சொல்கின்றன.
சூரியன் ஒளித் தேரில் பவனி வருகிறான். ஒளியின் 7 வண்ணங்களே 7 குதிரை களாகச் சொல்லப்படுகின்றன. ரத சப்தமி நாளில் புனித நீராடி சூரியனை வழிபட வேண்டும்.
சூரிய பகவான் நாராயணனின் அம்சமாகவும் இருப்பதால் விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணமும் செய்வது நன்மையைத் தரும். சூரியன் ஆரோக்கியத்துக்கு உரிய கிரகம். சூரியனை வழிபடுவதன்மூலம் அவரின் அருளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
ரத சப்தமி அன்று சூரியனுக்கு ஒரு எளிய பரிகாரத்தை செய்வதால் வாழ்க்கையில் அளவில்லாத மாற்றங்களை பெற முடியும். அதன்படி ரத சப்தமி அன்று ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீருடன் சிறிதளவு பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை எடுத்துச் சென்று, வெள்ளை எருக்கம் செடிக்கு ஊற்ற வேண்டும்.
"ஓம் ஸ்ரீசிவசூரிய நாராயண சுவாமியே நமஹ" என்ற மந்திரத்தை 3 முறை சொல்லி அந்த தண்ணீரை வெள்ளை எருக்கம் செடிக்கு ஊற்ற வேண்டும். மிக எளிமையான இந்த பரிகாரத்தை செய்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் பெரியவர்கள்.
நகரத்தில் இருப்பவர்கள் வெள்ளை எருக்கம் செடியை கண்டுபிடிக்க முடியாது. அதனால் இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் சிறிதளவு பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு வெல்லம் கலந்து, மனிதர்கள் கால்படாத இடமாக பார்த்து தூவி விடலாம்.
நாம் அளிக்கும் பச்சரிசியை ஒரு எறும்பு சாப்பிட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிடைக்கும் என்பார்கள். அதனால் பாவங்கள் நீங்கி, புண்ணிய பலன்களையும், சூரிய பகவானின் அருளையும் பெறுவதற்கு எறும்புகளுக்கு பச்சரிசி மாவை சாப்பிட கொடுப்பது நல்லது.
ரத சப்தமியன்று துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதும், இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. ஜோதிட ரீதியாக தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். பிதுர் லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.
ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
தலைமைப் பொறுப்புகளைப் பெற வேண்டி வழிபடக்கூடிய முக்கியமான கடவுள் சூரிய பகவான். அரசு வேலையில் உயர் பதவி வேண்டுவோர், பதவி தொடர்பாக தடைகள் உள்ளவர்கள், வழக்குகளில் வெற்றி வேண்டுபவர்கள் ரத சப்தமி விரதமிருந்து சூரிய பகவானை வழிபடுவது நன்மை தருவதாகும்.
கோவில்களில் நவகிரக சன்னதியில் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். ரத சப்தமி அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.