வழிபாடு

மீனாட்சி கோவிலில் நவராத்திரி விழா 23-ந்தேதி தொடங்குகிறது: கொலுவுக்கு பக்தர்களும் பொம்மைகள் வழங்கலாம்

Published On 2025-09-13 08:00 IST   |   Update On 2025-09-13 08:00:00 IST
  • மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி காட்சி தருவார்.
  • அக்டோபர் 1-ந் தேதி சிவபூஜை செய்யும் திருக்கோலங்களில் அம்மன் காட்சி தருகிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டுக்கான நவராத்திரி உற்சவ விழா வருகிற 23-ந்தேதி தொடங்கி 2-ந்தேதி வரை நடக்கிறது.

இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் மூலவர் சன்னதியில் நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குதான் நடைபெறும்.

விழா நாட்களில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

கோவிலில் வைக்கப்படும் கொலுவுக்கு அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள், இதர பொம்மைகளை பக்தர்கள் உபயமாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம்.

நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி காட்சி தருவார். 23-ந் தேதி ராஜராஜேசுவரி, 24-ந் தேதி வளையல் விற்றது, 25-ந் தேதி ஏகபாதமூர்த்தி, 26-ந் தேதி ஊஞ்சல், 27-ந் தேதி ரசவாதம் செய்த படலம், 28-ந் தேதி ருத்ரபசுபதியார் திருக்கோலம், 29-ந் தேதி தபசுகாட்சி, 30-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி, அக்டோபர் 1-ந் தேதி சிவபூஜை செய்யும் திருக்கோலங்களில் அம்மன் காட்சி தருகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News