புதுச்சேரி

தனியார் விடுதியில் பதுக்கி வைத்த 3½ கிலோ கஞ்சா பறிமுதல்: எம்.எல்.ஏ.வின் உறவினர் உள்பட 2 பேர் கைது

Published On 2023-10-28 08:06 GMT   |   Update On 2023-10-28 08:06 GMT
  • தனியார் தங்கும் விடுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • விசாரணை நடத்தியதில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

புதுச்சேரி:

புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிரடி படை போலீசார் ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த 3 ½ கிலோ கஞ்சாவை கண்டெடுத்தனர்.

இதையடுத்து அந்த ஓட்டல் உரிமையாளரான முதலியார்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் எம்.டெக். பட்டதாரி ஆவார்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் அவருடைய நண்பர் அஸ்வின் (34) மூலம் பெங்களூருவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து புதுவை திருமால் நகரை சேர்ந்த என்ஜினியரிங் பட்டதாரி அஸ்வினையும் போலீசார் கைது செய்தனர். விடுதி அறையில் இருந்த 3 ½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட வினோத்குமார் புதுவையை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ.வின் உறவினர் ஆவார். மற்றொருவரான அஸ்வின் புதுவை அரசியல் கட்சி நிர்வாகியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News