சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா ஏற்பாடுகளை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு செய்த காட்சி.
திருக்காஞ்சி சங்கராபரணி மகா புஷ்கரணி ஏற்பாடுகள் தீவிரம்-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு
- வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் அரசு சார்பில் வருகிற 22-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.
- புஷ்கரணி விழா ஏற்பாடுகளுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 12 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் அரசு சார்பில் வருகிற 22-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை புதுவை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. விழாவின் ஒரு பகுதியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது.
புஷ்கரணி விழாவிற்கு வரும் பக்தர்கள் புனித நீராடி செல்ல சங்கராபரணி ஆற்றில் திருக்காஞ்சி பகுதியில் படித்துறை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வந்து செல்வதற்காக கணுவாப்பேட்டை சாலை, ஒதியம்பட்டு புதிய மேம்பால சாலை, திருக்காஞசி மற்றும் உட்புற சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
புஷ்கரணி விழா ஏற்பாடுகளுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 12 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டிகளுடன் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது நடைபெற்ற இடம் பணிகள் குறித்தும் யார் யாருக்கு என்னென்ன பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் சிரமமின்றி வந்து செல்ல சாலை மேம்பாட்டு வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
மேலும் இதனை தொடர்ந்து விழா நடைபெற இருக்கும் சங்கராபரணி ஆற்றங்கரையில் படித்துறைக்கு சென்ற ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பாதுகாப்பாக ஆற்றில் இறங்கி குளிப்பதற்கும் ஆற்றில் இறங்க முடியாதவர்கள் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஷவர் மூலம் குளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
கோவில் சிவாச்சாரியார் சரவணன் நிருபர்களிடம் கூறும்போது,
புஷ்கரணி விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு சங்கராபரணி ஆற்றில் நீராடினால் முன்னோர்கள் தோஷம் தீரும் திருமண தோஷம் புத்திர பாக்கியம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்றார்.