கோப்பு படம்.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை
- முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
- முதல்-அமைச்சர் பரிந்துரையை அனுப்ப வேண்டியது என் கடமை என தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர் சந்திரபிரியங்கா தனது ராஜினாமாவை கவர்னருக்கு அனுப்பியுள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் பதவியிலிருந்து சந்திரபிரியங்காவை நீக்கிவிட்டு, திருமுருகனை அமைச்சர் பதவியில் நியமிக்க கவர்னரிடம் பரிந்துரை கொடுத்தார்.
அதற்கான ஒப்புதல் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்துள்ளது. இதையறிந்த சந்திரபிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் என நான் கூறியிருந்தேன். சந்திரபிரியங்காவை கலந்து பேசாமல், அவரிடம் ராஜினாமா கடிதத்தை பெறாமல், அவரை டிஸ்மிஸ் செய்யவும், அந்த இடத்தில் திருமுருகனை அமைச்சராக நியமிக்கவும் பரிந்துரையை கவர்னர் தமிழிசை மூலம் முதல்-அமைச்சர் ரங்கசாமி அனுப்பினார்.
சந்திரபிரியங்கா தகுதிநீக்கம் தொடர்பாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கமும், நானும் பேட்டியளித்தோம். அதற்கு கவர்னர் தமிழிசை பதிலளித்துள்ளார். 6 மாதம் முன்பு சந்திரபிரியங்கா அமைச்சர் செயல்பாடுகளில் முதல்-அமைச்சர் அதிருப்தி தெரிவித்தார்.
அதை அவரிடம் கூறினேன். 6 மாதமாக அவர் திறமையாக செயல்படாததால் பதவிநீக்கம் செய்ய கோப்பை முதல அமைச்சர் கொடுத்தார், உள்துறை அமைச்சகத்துக்கு நான் அனுப்பினேன். முதல்-அமைச்சர் பரிந்துரையை அனுப்ப வேண்டியது என் கடமை என தமிழிசை கூறியுள்ளார்.
தமிழிசை புதுவையின் பொறுப்பு கவர்னராக பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்துள்ளார். முதல்-அமைச்சருக்கும், கவர்னருக்கும் நடந்த உரையாடல்கள், முதல்-அமைச்சர் அளித்த கடிதம் போன்றவற்றை கவர்னர் தமிழிசை வெளியில் சொல்வது ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொ ண்டதற்கு எதிரானது, முரண்பாடானது.
முதல்-அமைச்சர் அனுப்பிய கோப்பை டெல்லிக்கு அனுப்பி ஒப்புதல் வந்த பிறகு அதுதொடர்பான அறிவிப்பை மட்டுமே மாநில அரசிதழில் வெளியிட வேண்டும். இதுதொடர்பாக பேட்டி அளிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ரகசியகாப்பு பிரமாண த்திற்கு எதிரானது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திரபிரியங்கா ராஜினாமா செய்யும் முன்பே முதல்- அமைச்சர் அவரை பதவிநீக்கம் செய்து விட்டார் என சொல்கிறார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. அமைச்சர் பதவி நீக்கமா? ராஜினாமா? என்பது மர்மமாக உள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.