புதுச்சேரி

தனியார் கம்பெனியில் பூட்டை உடைக்கும் மர்ம ஆசாமி.

எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருட்டு

Published On 2022-08-16 09:05 GMT   |   Update On 2022-08-16 09:05 GMT
  • இந்த கம்பெனியின் வளாகத்தில் குடோன் அமைந்துள்ளது.
  • பல லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு போயிருந்ததை கண்டு நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி:

சேதராப்பட்டு அருகே துத்திப்பட்டு மெயின் ரோட்டில் சிமெண்ட் கம்பெனி இயங்கி வருகிறது.

இந்த கம்பெனியின் வளாகத்தில் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பல லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு போயிருந்ததை கண்டு நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ நடந்த இடத்திற்கு வந்த சேதராப்பட்டு போலீசார் அங்கு பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சி.சி.டி.வி.யி.ல் பதிவாகி இருந்த காட்சியில், சம்பவம் நடந்த கட்டிடத்தின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து பட்டப்பகலில் புகுந்த மர்ம ஆசாமி சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஆவார்.

இவர் முதல் தளத்தில் உள்ள வளாகத்திற்கு வருகிறார். அப்போது அங்கு பூட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு அறையை சிறிய துவாரத்தின் வழியே நோட்டமிடுகிறார். பின்னர் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே செல்லும் அவர் அங்கிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக தூக்கிச் சென்று கொல்லைபுறம் வழியாக வீசிவிட்டு வருகிறார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அறையில் இருந்த கனமான எலக்ட்ரிக் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக திருடி செல்கிறார். உயரத்தில் இருந்த சி.சி.டி.வி.யை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் கையில் இருந்த பொருளால் சி.சி.டி.வி. கேமராவை அடித்து நொறுக்குகிறார். சி.சி.டி.வி. கேமராவில் ஹார்ட் டிஸ்க் உயரத்தில் இருந்ததால் அந்த வாலிபரால் அதனை எடுக்க முடியவில்லை.

எனவே பொருட்களை திருடிவிட்டு தப்பி செல்லும் காட்சி சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகி உள்ளது.இந்த காட்சியை வைத்து கொள்ளையனை போலீசார் தேடினர்.

அப்போது அந்த வாலிபர் கம்பெனியை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்தனர்.

அவரை போலீசார் தேடி வருகின்றனர். சமீப நாட்களாக சேதராப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் கம்பெனி நடத்தி வருபவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News