சாராயக்கடை அருகே பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வரும் காட்சி.
பயணியர் நிழற் குடை அருகே உள்ள சாராயக்கடையை அகற்ற வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- வடக்கு பகுதியில் கடைகளுக்கு நடுவே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனையில் 4 வழி சாலை மற்றும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
சாலையின் வடக்கு பகுதியில் கடைகளுக்கு நடுவே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
அதேபோல் சாலையின் தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் சாராயக்கடை உள்ளது. இதன் அருகில் தற்போது பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக கட்டுமான பொருட்களை வைத்து ஊழியர்கள் பயணியர் நிழற்குடை கட்டி வருகிறார்கள். பயணியர் நிழற்குடை பின்புறம் சாராயக்கடை இருப்பதால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பஸ் பயணிகள் இந்த இடத்தில் நின்று பஸ்சுக்காக காத்திருக்கும் போது மது பிரியர்களின் தொந்தரவு காரணமாக பல்வேறு பிரச்சனைகள் எழும் நிலை உள்ளது.
எனவே சாராயக்கடை அருகில் பயணியர் நிழற்குடை அமைக்க அப்பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாராயக்கடையை அங்கிருந்து அகற்றி வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.