புதுச்சேரி

கோப்பு படம்.

விபத்து நடந்த தொழிற்சாலையின் தவறுகளை அரசு மூடி மறைக்கிறது

Published On 2023-11-17 08:47 GMT   |   Update On 2023-11-17 08:47 GMT
  • அ.தி.மு.க. குற்றச்சாட்டு
  • காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தான்றோன்றித்தனமாக செயல்பட்டு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் யுவராஜ் என்ற மற்றொரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவருக்கு 17 வயதுகூட பூர்த்தியாகவில்லை. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என சட்டம் உள்ளது.

இதுகுறித்து மருந்து தொழிற்சாலை உரிய விளக்கம் தர வேண்டும். ஆளும் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் அரசு தொழிற்சாலை தவறுகளை மூடிமறைத்து அவர்களை காப்பாற்றும் செயலில் ஈடுபடுவது வேதனை தருகிறது.

காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தான்றோன்றித்தனமாக செயல்பட்டு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர். சீனியர் எஸ்.பி, டி.ஜி.பி. ஆகியோர் காலாப்பட்டு போலீசாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு அதிகபட்சமான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். மேலும் சிலர் உயிரிழக்கும் தருவாயில் உள்ள நிலையிலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது ஏன்?

பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்க வேண்டும் என கவர்னரிடம் கேட்டுள்ளோம். தனியார் தொழிற்சாலை விபத்து, நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஒட்டு மொத்தமாக விபத்து ஏற்பட்ட முதல் தற்போதைய நிலை வரை ஒரு விரிவான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணை செயலாளர் நாகமணி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News