புதுச்சேரி

அரசியல் பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனையில் ரூ.64 லட்சம் சிக்கியது

Published On 2024-04-18 04:00 GMT   |   Update On 2024-04-18 04:00 GMT
  • புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
  • தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகர் 11-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் புரந்தரதாசன். இவர் அரசியல் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.

3 மாடி கொண்ட வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் இவரது வீட்டுக்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினர் அங்கு அதிரடியாக சோதனையிட்டனர்.

அப்போது அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் ஒரு பெண் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் புரந்தரதாசன் வீட்டில் இருந்த ரூ. 64 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த தொகை கடந்த ஆண்டு நிலம் விற்பனை செய்ததின் மூலம் கிடைத்ததாக அங்கிருந்த புரந்தரதாசன் தெரிவித்தார். மேலும் அதற்கான சில ஆவணங்களையும் காண்பித்தார்.

ஆனால் அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் பதுக்கி வைத்திருக்க கூடாது என்று கூறி பணம் எண்ணும் எந்திரத்தை கொண்டு வந்து பணத்தை எண்ணினர். பின்னர் ரூ. 64 லட்சத்து 60 ஆயிரத்தை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

அவர்கள் 500 ரூபாய் நோட்டுகள் ரொக்கமாக ரூ.25 ஆயிரம் வைத்திருந்தனர். அவர்களை லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் மற்றும் தருமன் என்பது தெரியவந்தது. இருவரும் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை தேர்தல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபோல் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அரசியல் கட்சியை சேர்ந்த மேலும் 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News