புதுச்சேரி

புதுச்சேரியில் திருப்பத்தை ஏற்படுத்தும் இளைஞர்கள் வாக்கு யாருக்கு?

Published On 2024-04-11 06:17 GMT   |   Update On 2024-04-11 06:17 GMT
  • வீடு, வீடாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீசும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • 2019-ம் ஆண்டு வரை நடந்துள்ள பாராளுமன்ற தேர்தல்களில் அதிகபட்சமாக 82.1 சதவீத வாக்குகள் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 ஓட்டுகளில் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மட்டும் 2 லட்சத்து 21 ஆயிரத்து 309 பேர் உள்ளனர்.

மொத்த வாக்காளர்களில் 21.61 சதவீதத்தினர் இளைஞர்கள். இதில் 20 முதல் 29 வயதுக்குள் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 388 பேரும், 19 வயதிற்குள் முதல் முறையாக 28 ஆயிரத்து 28 ஆயிரத்து 921 பேரும் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.

இதனால் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் யாரை வெற்றி பெற வைப்பது என்பதை முடிவு செய்யும் சக்தியாக இளைஞர்கள் உருவெடுத்துள்ளனர். இவர்களின் ஓட்டுகள் யாருக்கு? என கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் திணறி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் விஷயத்தில் இளைஞர்களிடம் புரிதல் இருந்தாலும், எந்த கட்சி மீதும் அபிமானம் இல்லை. இதனால் யாருக்கு வாக்களிப்பது என அவர்களுக்குள் பெரும் விவாதமே நடந்து வருகிறது. இளைஞர்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ள புரட்சி ஆயுதமாக ஓட்டு மாறியுள்ளது.

இதில் இளைஞர்கள் பலரும் ஓட்டு போடாமல் இருக்கவும் நோட்டாவுக்கு வாக்களிக்கவும் திட்டமிடுகின்றனர். இதை தவிர்த்து வேட்பாளருக்கு வாக்களிக்க வைக்கும் முயற்சியில் புதுச்சேரி மாவட்ட தேர்தல் துறை தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.

பாண்லே பால் பாக்கெட்டுகள், செல்பி கார்னர், மல்லர் கம்பம் விளையாட்டு, தப்பாட்டம், பெற்றோர்களுக்கு கடிதம், சிலிண்டர் விநியோகத்துடன் நோட்டீஸ் என 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.

அதேநேரத்தில் இளைஞர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது, ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் எப்.எம். ரேடியோக்களில் மாவட்ட தேர்தல் துறை தீவிர விளம்பரமும் செய்து வருகிறது.

முதலில் ஓட்டு போடு, அப்புறம் ஓ போடு எனவும், அங்கே என்னடா? உங்க அப்பாவும், எங்க அப்பாவும் வரிசையில் நிற்கிறார்கள் என ஒரு மாணவர் கேட்க, மற்றொருவர் தேர்தல் பற்றி தெரியாமல் இருக்கலாமா, வாடா நாமும் ஓட்டுபோட வரிசையில் நிற்போம் எனவும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர வீடு, வீடாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி நோட்டீசும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு வரை நடந்துள்ள பாராளுமன்ற தேர்தல்களில் அதிகபட்சமாக 82.1 சதவீத வாக்குகள் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.

இந்த முறை அதிகபட்ச வாக்கு சதவீதத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு தேர்தல் துறை தீவிர பணியாற்றி வருகிறது. குறிப்பாக இளைஞர்களை வாக்களிக்க வைக்க வேண்டும் என தீவிர முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.

அதே வேளையில் இளைஞர்கள் ஓட்டை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் அவர்களை குறி வைத்து போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் அரசியல் கட்சியினருக்கு பிடி கொடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் யாருக்கு ஓட்டு அளிப்பார்கள் என கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் திணறி வருகின்றனர்.

Tags:    

Similar News