புதுச்சேரி

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

Published On 2024-04-17 09:26 GMT   |   Update On 2024-04-17 09:26 GMT
  • காங்கிரஸ் பிரமுகர் பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல்.
  • காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மோகன் தாஸ். காங்கிரஸ் பிரமுகரான இவர், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

இவர் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக ஏம்பலம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு காங்கிரஸ் பிரமுகர் மோகன் தாஸ் பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து கிருமாம்பாக்கத்தில் உள்ள மோகன்தாஸ் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் காரில் வந்தனர். அவர்கள், மோகன் தாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

அப்போது அங்கு மோகன் தாஸ் இல்லை. அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரது தாயார் மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம், சோதனையிட வந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை அறிந்த மோகன் தாஸ் வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் அவரது முன்னிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் அவரிடம் தொழில் தொடர்பான ஆவணங்களின் விவரங்களை கேட்டறிந்தனர். அதன் பின் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சோதனையின் முடிவில் பணமோ, ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் வைத்திலிங்கம் எம்.பி.யின் உறவினர் வீடுகளில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News