புதுச்சேரி

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய சென்னை பட்டதாரி வாலிபர் கைது

Published On 2023-07-11 09:33 IST   |   Update On 2023-07-11 09:33:00 IST
  • ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.8 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டினார்.
  • வாலிபர் தொடர்ந்து பணம் கேட்டு பெண்ணிடம் தொந்தரவு செய்து வந்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான 31 வயது பெண்ணின் செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'இன்ஸ்டாகிராம்' மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. எதிர்முனையில் செய்தி அனுப்பிய நபர், அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பினார்.

மேலும் அந்த நபர், உனது ஆபாசபடம் நிறைய இருப்பதாகவும், அதனை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.8 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பயந்து கணவரிடம் அதனை தெரிவிக்காமல் அந்த நபருக்கு ரூ.8 ஆயிரத்தை அனுப்பி வைத்தார்.

ஆனால் அந்த நபர், தொடர்ந்து பணம் கேட்டு அந்த பெண்ணிடம் தொந்தரவு செய்து வந்தார். இதையடுத்து அந்த பெண் தனது கணவரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதுகுறித்து பெண்ணின் கணவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர் சென்னையை சேர்ந்த பட்டதாரி வாலிபர் விக்னேஷ் (வயது26) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News