புதுச்சேரி

மோடி, அமித்ஷாவை விட வெள்ளையர்கள் நாணயமானவர்கள்: ஆ.ராசா

Published On 2023-09-06 06:55 GMT   |   Update On 2023-09-06 06:55 GMT
  • அமித்ஷா உள்பட பா.ஜனதாவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள்.
  • சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார்.

புதுச்சேரி:

புதுவை வீராம்பட்டினத்தில் கருணாநிதி சிலையை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

கருணாநிதி தனது அறிவால், ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால் தமிழக முதல்-அமைச்சராக இந்திய அரசியலுக்கு ஆற்றியுள்ள பங்கு ஏராளம். அவர் எத்தனையோ பிரதமர், ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளார்.

அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கருணாநிதியின் பங்கு அதிகம்.

சனாதனம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நான் புதுவையிலிருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன்.

அமித்ஷா உள்பட பா.ஜனதாவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள். டெல்லியில் திறந்த வெளியில் விவாதிப்போம். தி.மு.க சார்பில் நானும் பேசுகிறேன்.

நாங்கள் சனாதனம் வேண்டாம் என போராடியதால்தான் தமிழிசை கவர்னர், வானதி சீனிவாசன் வக்கீல், அண்ணாமலை ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆனார்கள்.

சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லாவிட்டால் வேறு வேலைக்கு சென்றிருப்பார்.

மோடியை விட அமித்ஷாவை விட பா.ஜனதாவில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் விட ஆர்.எஸ்.எஸ்.சில் இருப்பவர்களை விட வெள்ளையர்கள் நல்லவர்கள், நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இங்கு வந்து, எங்கள் அரசு உங்களுக்கு பாவம் செய்துவிட்டது என கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.

ஆனால் மணிப்பூரில் 200-க்கும் மேற்பட்டவர்களை கொன்றுவிட்டு, பழங்குடியினத்தை சேர்ந்த இளம்பெண்களை ஆடைகள் இல்லாமல் அழைத்து சென்று காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர்.

இதை நியாயப்படுத்தும் அங்குள்ள முதல்-அமைச்சரை பாராளுமன்றத்தில் மோடி, அமித்ஷா பாராட்டுகின்றனர். ஊழலும், மதவாதமும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்த ஆட்சியை தூக்கி எறிய நாம் எல்லோரும் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News