புதுச்சேரி

கோப்பு படம்.

சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாற்றம்

Published On 2023-06-16 14:57 IST   |   Update On 2023-06-16 14:57:00 IST
  • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
  • மறியல் போராட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் வந்து சமாதானப்படுத்தி முடித்து வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் இயங்கிவந்த சுப்பிரமணிய பாரதியார் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளி கட்டிடத்துக்கு மாற்றினர். பெண்கள் பள்ளி மாணவிகளை தங்கள் பள்ளியில் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டி வீரமாமுனிவர் பள்ளி மாணவர்கள் மறுத்தனர்.

இதனால் சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் வெங்கடசுப்பாரெட்டியார் சிலை சதுக்கத்தை சுற்றிலும் அமர்ந்து மறியல் நடத்தினர்.

2 மணி நேரம் நீடித்த மறியல் போராட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் வந்து சமாதானப்படுத்தி முடித்து வைத்தார். 2 நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து 2 பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அமைச்சர் பேசினார்.

பேச்சுவார்த்தையில் இந்த கல்வியாண்டு மட்டும் வீரமாமுனிவர் பள்ளி கட்டிடத்தில் சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பது என முடிவு செய்யப்பட்டது. வீரமாமுனிவர் பள்ளி மாணவர்கள் திரு.வி.க. ஆண்கள் பள்ளி மாணவர்களோடு இணைந்து ஒரே ஷிப்டாக முழுநேரம் பள்ளியை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இன்றைய தினம் சுப்பிரமணியபாரதியார் மற்றும் வீரமாமுனிவர் பள்ளிகளுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை பள்ளிகள் இடம் மாறி செயல்பட உள்ளது. அதற்கிடையில் பெற்றோர்களை அழைத்து பள்ளி வளாகத்திலேயே பேச்சு நடத்தவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, நடப்பு கல்வியாண்டில் மட்டும் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகள் வீரமாமுனிவர் பள்ளி கட்டிடத்தில் படிப்பர். விரைவில் பூமி பூஜை செய்யப்பட்டு சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி புதுப்பிக்கப்படும்.

இது தற்காலிக ஏற்பாடுதான். ஓராண்டில் பள்ளி கட்டிடம் கட்டப்படும். மீண்டும் மாணவிகள் அவர்கள் பள்ளிக்கே சென்றுவிடுவர்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளதால் முழுமையாக பள்ளியை இயக்க வேண்டும். எனவே ஷிப்ட் முறையை கைவிட்டு வீரமாமுனிவர், திரு.வி.க. பள்ளி இணைந்து திரு.வி.க.பள்ளியில் முழுநேர பள்ளியாக இயங்கும். இருதரப்பு பள்ளியை சேர்ந்த பெற்றோர்களையும் கலந்து ஆலோசித்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News