குடியிருப்பு கட்டுமான பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார்.
நவீன முறையில் குடியிருப்பு கட்டும் பணி
- அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு
- மின்தடையின்றி இயங்க ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட்டு நவீனமயமாக கட்டிடம் கட்டப்படும்.
புதுச்சேரி:
புதுவை குமரகுரு பள்ளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்ட குடியிருப்பு பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி பெற்று பொதுப்பணித்துறை மூலம் 216 குடியிருப்புகள் அடங்கிய தரை மற்றும் 12 தளம் கொண்ட 2 கட்டடங்கள் ப்ரீகாஸ்ட் முறையில் ரூ.45 ½ கோடியில் கட்ட கடந்த ஜனவரியில் பூமிபூஜை போடப்பட்டது.
இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறியதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஒப்புதல் சான்று பெறப்பட்டு முதல்கட்டடம் அமைக்க 130 பைல் அமைக்கப்பட உள்ளது. 38 மீட்டர் ஆழம், 2 அடி விட்டம் கொண்ட 2 பைல் பரீட்சார்த்த முறையில் போடப்பட்டு அதன் மீது லோடு ஏற்றி சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பைல் போடும் பணி தொடங்கும்.
தரை மற்றும் 12 தளம் கொண்ட 2 கட்டிடம் கட்டப்படும். முதல் கட்டிடத்தில் ஒரு தளத்தில் 12 வீடுகள் என 144 வீடுகளும், கட்டடம் 2-ல் ஒரு தளத்தில் 6 வீடுகள் என 72 வீடுகளும் கட்டப்படும்.
ஒவ்வொரு வீடும் ஹால், படுக்கை, சமையல் அறைகள், கழிவறையோடு கூடிய குளியலறை, பால்கனி வசதியுடன் 407 சதுர அடியில் அமைக்கப்படும். தரமான பைல் பவுண்டேஷன் அமைக்கப்பட்டு பிரீகாஸ்ட் தொழில்நுட்பத்தில் கட்டடம் கட்டப்படுவதால் குறுகிய காலத்தில் பணிகளை முடிக்கலாம். 15 மாதத்தில் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்து.
ஒவ்வொரு கட்டடத்திலும் 2 லிப்ட், தீயணைப்பு, மின்னல் தடுப்பு வசதிகள் செய்யப்படும். 2 கட்டிடத்தை சுற்றிலும் மதில் சுவர், சாலைகள், தெருவிளக்கு, பாதாள சாக்கடை அமைக்கப்பட உள்ளது. மின்தடையின்றி இயங்க ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட்டு நவீனமயமாக கட்டிடம் கட்டப்படும். கட்டம் 2 அமைக்க பழுதான 96 வீடுகள் உள்ள 3 கட்டடத்தை இடிக்க கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் கிடைத்தவுடன் மக்களை தற்காலிகமாக வெளியேற்றிவிட்டு, 3 கட்டி டங்களும் இடிக்கப்பட்டு, புதிய 2-ம் கட்டட கட்டுமான பணி தொடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.