புதுச்சேரி

எச்சரிக்கையை மீறி கடலில் குளித்த வாலிபர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீசார்

Published On 2024-04-03 08:31 GMT   |   Update On 2024-04-03 08:33 GMT
  • இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.
  • போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

புதுச்சேரி:

புதுவை கடல் மிகவும் ஆபத்தானது ஆகும். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று கடலில் குளித்த மாணவ-மாணவிகள் 4 பேர் அலையில் சிக்கி பலியானார்கள். அதைத் தொடர்ந்து கடலில் இறங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாள்தோறும் காலை முதல் மாலை வரை போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று கடலில் இறங்குவதை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரையில் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியே அழைத்து வந்தனர்.

அதோடு நிற்காமல், கொளுத்தும் வெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளில் எழுதியுள்ள வாசகங்களை வாசிக்க செய்தனர்.

சுமார் 1½ கி.மீ. தூரத்துக்கு அவர்களை நடத்தியே அழைத்து சென்று அனைத்து விழிப்புணர்வு பதாகைகளிலும் எழுதியுள்ள வாசகங்களை படித்த பின்னரே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

Tags:    

Similar News