புதுச்சேரி

செயல்படாத தானியங்கி சிக்னல் கம்பத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.

செயல்படாத தானியங்கி சிக்னல் கம்பத்துக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தி போராட்டம்

Published On 2023-07-22 13:44 IST   |   Update On 2023-07-22 13:44:00 IST
  • போக்குவரத்து சிக்னலை சீரமைத்து செயல்பட வைக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்து வந்தனர்.
  • அடிக்கடி இந்த சிக்னல் பழுதாகி வருவதால் தரமான மதர்போர்டு அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் தங்களது கடமையை சரிவர செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

புதுச்சேரி-கடலூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரியாங்குப்பம் அமைந்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள கோட்டைமேடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் பழுதாகி காட்சி பொருளாக உள்ளது.

இதனால் போக்குவரத்தை சீரமைக்க தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இந்த பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.

எனவே இந்த போக்குவரத்து சிக்னலை சீரமைத்து செயல்பட வைக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அரியாங்குப்பத்தில்  நூதன போராட்டம் நடைபெற்றது.

அமைப்பாளர் தீனா தலைமையில் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் துணை அமைப்பாளர் கர்ணா, ஒருங்கிணைப்பாளர் சந்திரன் மற்றும் பாரதி, வடிவேல், பரத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதில் அடிக்கடி இந்த சிக்னல் பழுதாகி வருவதால் தரமான மதர்போர்டு அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் தங்களது கடமையை சரிவர செய்ய வேண்டும்.

இதில் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News