புதுச்சேரி

முதல் முறையாக பசுமை ஓட்டுச்சாவடி-வாக்காளர்களுக்கு மோர், கூழ்: தேர்தல் துறை ஏற்பாடு

Published On 2024-04-07 09:31 GMT   |   Update On 2024-04-07 09:31 GMT
  • புதுச்சேரியில் முழுக்க முழுக்க ஒரு ஓட்டுச்சாவடி பசுமை ஓட்டுச்சாவடியாக செயல்பட உள்ளது.
  • ஓட்டுச்சாவடி வாயிலில் வாழை மரங்கள், இளநீர் கட்டப்பட்டு, பச்சை மா, தென்னங்கீற்று பந்தல், தோரணங்கள் கட்டப்படுகிறது.

புதுச்சேரி:

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக, புதுச்சேரி தேர்தல் துறை மாநிலம் முழுவதும் ஓட்டுச்சாவடிகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஓட்டு போட வருபவர்கள் வரிசையில் நிற்கும்போது வெயிலில் இருந்து தப்பிக்க ஓட்டுச்சாவடி வாயில்களில் பெரிய இரும்பு ஷீட் கூரை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக வீல் சேர் உள்ளிட்ட வசதிகள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலை பசுமை தேர்தலாக மாற்றுவதற்கு ஏதுவாக ஓட்டுச்சாவடிக்கு வருபவர்கள் வாகனங்களை தவிர்த்து விட்டு நடந்து வருமாறும் தேர்தல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் முழுக்க முழுக்க ஒரு ஓட்டுச்சாவடி பசுமை ஓட்டுச்சாவடியாக செயல்பட உள்ளது.

இந்த பசுமை ஓட்டுச்சாவடி புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள 138 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹெரிட்டேஜ் கட்டிடமான வ.உ.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ளது.

இந்த பள்ளி வளாகத்தில் 2 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி வாயிலில் வாழை மரங்கள், இளநீர் கட்டப்பட்டு, பச்சை மா, தென்னங்கீற்று பந்தல், தோரணங்கள் கட்டப்படுகிறது.

ஓட்டு போட வருபவர்களின் தாகம் தணிக்க மண் பானையில் குடிநீர், மோர் மற்றும் கேப்பை கூழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும் அந்த ஓட்டுச்சாவடி வளாகமே முழுக்க குளிர்ச்சியாக காட்சியளிப்பதற்கு பல்வேறு பணிகளை தேர்தல் துறை செய்து வருகிறது.

Tags:    

Similar News