புதுச்சேரி

மரத்தை அகற்ற கோரி வைக்கப்பட்டுள்ள நூதன பேனர்

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற நூதன பேனர்

Published On 2023-06-17 10:43 IST   |   Update On 2023-06-17 10:43:00 IST
  • இந்த மரம் 10 ஆண்டுக்கு முன்பு வாய்க்கால் சீரமைப்பு பணியின்போது வேர்களை வெட்டியதால் சரிந்தது.
  • ஆபத்தான நிலையில் உள்ள மரத்தால் பொதுமக்களுக்கும், எனக்கும், எனது வீட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி:

இயற்கை ஆர்வ லர்களான பிரெஞ்சுக் காரர்கள் புதுவையை நிர்மாணிக்கும்போதே பசுமையாக சாலைகளை அமைத்தனர்.

இதனால் புதுவை நகர பகுதியில் இருக்கும் பெரும்பாலான சாலைகளில் நிழல் தரும் மரங்கள் இருப்பதை பார்க்கலாம். சில சாலைகளில் மரங்களால் வெயிலே தெரியாது. இந்த சாலையில் வசிப்பவர்கள் தொடர்ந்து மரங்களை பராமரித்து வருகின்றனர்.

சில சாலைகளில் மரங்கள் இடையூறாகவும் உள்ளது. அண்ணாசாலை, பெருமாள் கோவில் சந்திப்பில் நீண்டகாலமாக வீடு, புத்தக கடை வாசிலில் மரம் உள்ளது. இந்த மரம் 10 ஆண்டுக்கு முன்பு வாய்க்கால் சீரமைப்பு பணியின்போது வேர்களை வெட்டியதால் சரிந்தது.

தொடர்ந்து வேர்கள் மீண்டும் வளரும்போது வீட்டின் தரைதளத்திற்குள் சென்றது. வனத்துறை அனுமதியின்றி மரத்தை வெட்டக்கூடாது என்பதால் வீடு, கடை உரிமையாளர் வேர்களை மட்டும் வெட்டி சரிசெய்து வந்தனர்.

சமீபகாலமாக தரை தளத்துக்கு வெளியில் வேர்கள் வர தொடங்கி ஆபத்தான நிலையில் உள்ளது. நடைபாதையில் நடப்பவர்களே வேர்கள் தடுக்கி கீழே விழும் நிலை உள்ளது. மரம் திடீரென பெயர்ந்து விழுந்தால் பொதுமக்களுக்கு பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

இதனால் கடை உரிமையாளர் கவர்னர், முதல்-அமைச்சர், கலெக்டர், வனத்துறை மற்றும் அதிகாரிகளுக்கு மரத்தை அகற்ற அனுமதி தரக்கோரி கோரிக்கை வைத்தார்.

அதேநேரத்தில், தனது கடையின் வாசலிலும், நூதனமாக ஒரு கோரிக்கை பேனர் வைத்துள்ளனர். அதில், ஆபத்தான நிலையில் உள்ள மரத்தால் பொதுமக்களுக்கும், எனக்கும், எனது வீட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த நூதன கோரிக்கை பேனர் அவ்வழியே செல்வோரை கவர்ந்துள்ளது.

அதேநேரத்தில் நேற்றைய தினம் வனத்துறை கடை உரிமையாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் 10 மரங்களை நட்டு, பாதுகாப்பு வளையம் வைத்து சில நாட்கள் பராமரித்து போட்டோ எடுத்து தரும்படியும், அதை தொடர்ந்து மரத்தை அகற்ற நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளனர்.

இதனால் கடை உரிமையாளர் 10 மரங்களை நட தயாராகி வருகிறார்.

Tags:    

Similar News