புதுச்சேரி

கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர்.

புதுவையில் என்.ஐ.ஏ. சோதனையில் வடமாநில வாலிபர் ஒருவர் சிக்கினார்

Published On 2023-11-08 09:03 GMT   |   Update On 2023-11-08 09:03 GMT
  • பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
  • கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி எல்லை பிள்ளை சாவடியில் 100 அடி சாலையில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே ஆசிரமத்துக்கு சொந்தமான பகுதி உள்ளது.

இதன் காம்பவுண்டு சுவரையொட்டி ஒரு சிறிய கேட் உள்ளது. இதற்குள் பழைய பொருட்கள் போட்டு வைத்துள்ள குடோன் உள்ளது.

இதன் மாடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் போலீசார் உதவியோடு இன்று சோதனை செய்தனர்.

அங்கு தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.கே. பாபு (வயது 26) என்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். காலை 8 மணி முதல் 11 மணி வரை 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது, பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து காரில் ஏற்றி அழைத்துச்சென்றனர். கோரிமேட்டில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அவரை கொண்டுசென்று விசாரணை நடத்தினர். அவர் வெளிநாட்டிலிருந்து நபர்களை கடத்தி வந்து புதுவை உட்பட வெளி மாநிலங்களில் கொத்தடிமையாக விற்பனை செய்துள்ளாரா?

எத்தனை பேரை அழைத்து வந்தார்? எங்கு விற்றுள்ளார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு தொடர்புள்ளதா? ஏதேனும் சதி செயலில் ஈடுபட்டனரா? பயங்கரவாத செயல்களுக்கு துணை போனாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுவையில் அவர் கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் எண்ணை உள்ளூர் போலீசார் சோதனையிட்டதில் எந்த தகவலும் காட்டவில்லை. இதனால் அவரது பெயர், ஆதார் எண் அனைத்தும் போலியாக இருக்கக்கூடும் என தெரிகிறது.

புதுவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வடமாநில வாலிபர் ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News