புதுச்சேரி

கோப்பு படம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தல்-நேரு எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2023-03-15 08:42 GMT   |   Update On 2023-03-15 08:42 GMT
  • புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பேசியதாவது:-
  • நகர பகுதியில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாததால் விபத்து மற்றும் குற்ற செயல்கள் அதிகம் நடப்பதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து சுயேச்சை எம்.எல்.ஏ நேரு பேசியதாவது:-

ஜி20 மாநாடு நடந்த ஒரு வாரம் புதுவை தூய்மையாக இருந்தது. அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்த புதுவை மாநிலம் முழுவதும் ஒரு மாதத்தில் தூய்மையாக பளிச்சென்று மாறி விடலாம்.

இதற்கு கவர்னர், தலைமை செயலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் முன் வர வேண்டும். நகர பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு வீதிகளில் வழிந்தோடும் நிலை உள்ளது.

நகர பகுதியில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாததால் விபத்து மற்றும் குற்ற செயல்கள் அதிகம் நடப்பதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கிய நிதியில் இதுவரை 60 சதவீத நிதியை கூட செலவு செய்யவில்லை என்று தெரிகிறது. தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைத்து பொறியியல் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். பஞ்சாலைகள் திறப்பு குறித்து கவர்னர் உரையில் குறிப்பிடாதது வேதனை தருகிறது.

ஸ்மார்ட் சிட்டி குறித்து விசாரனை அமைப்பை ஏற்படுத்த வேண்டும். புதுவை நகராட்சி செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மக்களுக்கு பேட்கோ மூலம் வழங்கப்பட்ட தொழில் கடன்கனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News