புதுச்சேரி

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை

Published On 2023-08-29 10:31 IST   |   Update On 2023-08-29 10:31:00 IST
  • காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
  • போலீசார் பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி:

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 21). இவர் புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

திருபுவனை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (31). இவர் என்ஜினீயரிங் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக பிரியதர்ஷினி படித்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது பிரியதர்ஷினியை சந்தித்த நிலையில் இருவரும் காதலித்துள்ளனர்.

இந்த நிலையில் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி கடந்த 16.5.2012 அன்று விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருபுவனை போலீசில் புகார் செய்தனர். போலீசார் பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பிரதீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News