அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் பேரணியாக சென்ற காட்சி.
நிலுவை சம்பளம் கேட்டு அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் பேரணி
- கோரிக்கையை வலியுறுத்தி மாபரும் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
- மாநில செயலாளர் சலீம், ஐ.என்.டி.யூ.சி. அபிஷேகம், தினேஷ்பொன்னையா, அரசு ஊழியர் சம்மேளனம் ஆனந்தராசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
புதுச்சேரி:
புதுவையில் அரசு சார்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி உட்பட பல்வேறு நிறுவனங்களில் ஆண்டுக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட வில்லை.
இந்த சம்பளத்தை வழங்கக்கோரி அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் தனித்தனியே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடலில் இறங்கி போராட்டம், கஞ்சி காய்ச்சும் போராட்டம் உட்பட பல போராட்டங் களை நடத்தினர். பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சம்பளம் வழங்கவில்லை.
இதையடுத்து புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழுவை அமைத்தனர். கூட்டு போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு புதுவை சுதேசி மில் அருகே நடத்தப் பட்டது.
இதில் அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை யோடு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாபரும் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் கோரிக்கை பேரணி நடந்தது. இதற்காக அனைத்து அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் அண்ணா சிலை அருகே திரண்டனர். கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். பாசிக் சங்கம் முத்துராமன், ரமேஷ், தரணிராஜன், பாப்ஸ்கோ சங்கம் ரமேஷ், ஜெய்சங்கர், பிரபு, விற்பனைக்குழு துரை செல்வம், பாஸ்கர பாண்டியன், சண்முகம் உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி அண்ணாசாலை, நேரு வீதி வழியாக சட்டசபை அருகே ஆம்பூர் சாலையை அடைந்தது. அங்கு தி.மு.க. சம்பத் எம்.எல்.ஏ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், ஐ.என்.டி.யூ.சி. அபிஷேகம், தினேஷ்பொன்னையா, அரசு ஊழியர் சம்மேளனம் ஆனந்தராசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
இதன்பின்னர் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். தொழிலாளர்கள் பேரணியையொட்டி புதுவை சட்டசபை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சட்ட சபையின் முன்புற பகுதியில் பேரிகார்டு அமைத்து, கயிறு கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.