புதுச்சேரி

புதுச்சேரி கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டம்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

Published On 2023-08-18 04:04 GMT   |   Update On 2023-08-18 04:04 GMT
  • 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழில்நுட்பத்துறை செயலர் மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறை செயலர் நெடுஞ்செழியன், மாவட்ட கலெக்டர் வல்லவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

புதுச்சேரியில் தொழில் நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். ஸ்கில்டா மூலமாக 4,000 தொழிற்கல்வி மாணவர்கள் மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.

இளநிலை கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.

இது மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலில் அதற்கான திட்டம் வகுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் விதமாக புதுச்சேரியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Tags:    

Similar News