கோப்பு படம்
சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு வலுக்கிறது
- புதுவையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் அமலாகிறது.
- 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும், 11-ம் வகுப்பிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் அமலாகிறது.
1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும், 11-ம் வகுப்பிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 127 அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்துக்கு விண்ணப் பித்துள்ளன. இதில் ஒரு சில பள்ளிகளை தவிர அனைத்து பள்ளிகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.
பள்ளிகள் விரைவில் திறக்க உள்ள நிலையில் சி.பி.எஸ்.இ. பாடபுத்தகம் கொள்முதல் செய்யவும் அரசின் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் ஆங்கிலம் கட்டாயமாகவும், 2 பிரிவில் தமிழ் கட்டாயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்து.
சமஸ்கிருதம், பிரெஞ்சு, இந்தி உள்ளிட்ட மொழிகள் விருப்ப பாடமாகவும் உள்ளது. மொத்தம் 19 பாடப்பிரிவுகளில் 6 பாடப்பிரிவுகளில் தமிழ் சேர்க்கப்படவில்லை. தமிழ் கட்டாயம் இல்லாமல் விருப்ப பாடமாக உள்ளதற்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதோடு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு முழுமை யாக தயாராகவில்லை. அதேநேரத்தில் சமீபத்தில் வெளியான 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. இதனால் மாணவர்களும் தயாராகாத நிலையில் உள்ளது. அவசர கோலத்தில் அரசு வேகவேகமாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. வரும்காலத்தில் இது மாணவர்களின் கல்வியை பாதிக்கும்.
தாய்மொழி யான தமிழை படிக்காமலேயே மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லக்கூடிய நிலை ஏற்படும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து கல்வித்துறை முன்பு நாளை மறுநாள் முற்றுகை போராட்டம் நடத்த சமூக நல அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
அவசரகதியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே 8-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் அடுத்த கல்வியண்டில் 9-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறி, 10-ம் வகுப்பில் தேர்வை எதிர்கொள்ள முடியுமா?
தமிழ் விருப்ப பாடம் என்பது தமிழை அழிக்கும் பா.ஜனதாவின் முயற்சியாக பார்க்க முடிகிறது. தமிழை கட்டாய பாடமாக அரசு பள்ளிகளில் அறிவிக்க வேண்டும். திட்டமிட்டு தமிழை பின்னுக்குதள்ள வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதை வன்மை யாக கண்டிக்கிறோம்.
தமிழை, தமிழர் பண்பாடை புகழ்வதுபோல பாசாங்கு செய்துகொண்டு, அதை அழிக்க நினைக்கும் பாதக செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இந்த கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை ஒரேயடியாக கொண்டுவருவதை கைவிட்டு, படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனால் புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை அமல்படுத்த புதுவையில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.