புதுச்சேரி

புதுச்சேரியில் அதிகரிக்கும் வெயிலால் வேட்பாளர்கள் திணறல்

Published On 2024-03-30 05:08 GMT   |   Update On 2024-03-30 05:08 GMT
  • அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
  • பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி:

தமிழகம்-புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கோடை காலமாகும்.

அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தினமும் 93 முதல் 94 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 95.72 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

நேற்று 94.64 டிகிரி வெயில் பாதிவாகியுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

இதனால் பொதுமக்களும் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், கோடை வெயிலை சமாளிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு மற்றும் பழச்சாறுகளை வாங்கி பருகி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனையும் ஜரூராக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் வேட்பாளர்கள் திணறி வருகின்றனர். மேலும் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவதால் காலை 8 மணிக்கே பிரசாரத்தை தொடங்கும் வேட்பாளர்கள் மதியம் 12 மணிக்குள் முடித்துக் கொள்கின்றனர்.

அதன் பிறகு வெயில் தாழ்ந்தவுடன் மாலை 6 மணிக்கு மீண்டும் பிரசாரத்தை தொடங்குகின்றனர்.

Tags:    

Similar News