புதுச்சேரி

வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் விமான நிலைய ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.

புதுவை விமான நிலையத்தை சேதாரபட்டுக்கு கொண்டு செல்லலாமா?

Published On 2023-04-25 10:12 IST   |   Update On 2023-04-25 10:12:00 IST
  • விரிவாக்கத்திற்கு 550 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
  • அதிகாரிகள் ஆய்வு.

புதுச்சேரி:

புதுவை விமான நிலைய ஆலோசனை குழுவின் கூட்டம் விமான நிலையத்தில் நடந்தது.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, விமான நிலைய இயக்குனர் விஜய்உபாத்யாய், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யாய் பேசியதாவது:-

புதுவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படாததால் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் விமானப் பயணிகள் பெங்களூர், சென்னை விமான நிலையங்களுக்கு செல்கின்றனர். இதனால் வருவாயும் அங்கு செல்கின்றது. புதுவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, கூடுதல் விமானங்களை இயக்கினால், விமான பயணிகளால் பொருளாதாரம் புதுவைக்கு கிடைக்கும். புதுவை விமான நிலையம் சுமார் 176 ஏக்கரில் அமைந்துள்ளது. இதனை விரிவாக்கம் செய்ய இன்னும் 550 ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. நிலத்தை கையகப்படுத்த ரூ.600 கோடியும், அதை மேம்படுத்த ரூ.1000 கோடி வரை நிதியும் தேவைப்படுகின்றது. இதற்கு மாற்றாக புதியதாக 700 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டால் அங்கு விமான நிலையத்தை கொண்டு செல்லலாம். விமான நிலையத்திற்கு அருகிலேயே அனுமதியின்றி உயரமான கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இறந்துபோன பறவை மற்றும் விலங்குகளின் உடல்களை விமான நிலையத்திற்குள் தூக்கி வீசுகின்றனர். இவைகளை தடுக்க வேண்டும். விமான நிலைய பாதுகாப்பிற்கு 51 ஐ.ஆர்.பி போலீசார் வேண்டும். 2 பெண் போலீசாரும் வேண்டும். விமான நிலையத்திற்கு வந்து செல்ல பொது போக்குவரத்து வசதி வேண்டும். புதுவை விமான நிலையத்தில் இருந்து திருப்பதி, சீரடி, கோவா, கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானம் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தால் விமான நிலைய மேம்பாட்டிற்கு நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறலாம். காலாப்பட்டு பல்கலைக் கழகத்திற்குப் பின்னால் 200 ஏக்கர் நிலம் கல்வி துறையிடம் உள்ளது. வேறு எங்கும் இடமில்லை. அங்கு வேண்டுமானால் விமான நிலையத்தை கொண்டுசெல்ல பரிசீலிக்கலாம். இவ்வாறு கல்யாணசுந்தரம் கூறினார்.இறுதியில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

சேதராப்பட்டில் அரசுக்கு சொந்தமான 700 ஏக்கர் நிலத்தில் விமான நிலையத்தை கொண்டு செல்லலாமா? என்று விமான நிலைய அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். புதுவையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்குவதை விட, புதுவையில் இருந்து சீரடிக்கு விமான சேவையை தொடங்கலாம். அதனை புதுவை-பெங்களூர்-சீரடி எனத் தொடங்கினால் நிச்சயம் அதிக பயணிகள் வருவார்கள். இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. பேசினார். 

Tags:    

Similar News