கோப்பு படம்.
மக்களை அச்சுறுத்தும் வகையில் பேனர் வைக்க கூடாது
- சிவா எம்.எல்.ஏ. தி.மு.க.வினருக்கு திடீர் கட்டுப்பாடு
- கட்சி வளர்ச்சிக்காகவோ வைத்திருந்தாலும் கூட அது மக்கள் மத்தியில் தவறாகவே சித்தரிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்,எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
பிறந்த நாள் கொண்டாடுவதை நான் விரும்புவதில்லை. ஆனால் என் மீதுள்ள அன்பின் காரணமாக தி.மு.க நிர்வாகிகள் எனது பிறந்த நாள் விழாவிற்காக பேனர் வைத்திருப்பது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
தி.மு.க தலைவரும், தலைமையும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என கட்டளையிட்டு உள்ளனர்.
விழா, நிகழ்ச்சி பற்றி தெரிவிக்க சம்பந்தப்பட்ட இடத்தில் சிறிய அளவில் பேனர் வைக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைமையின் அறிவிப்பை மீறி திரும்பும் இடமெல்லாம் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலையிலும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் பேனர் வைக்கும் செயலை அனுமதிக்க முடியாது.
இது தலைமை கழகத்திற்கு ஏற்புடையதும் அல்ல. பேனர் வைப்பது என்பது என்னை மகிழ்ச்சி படுத்துவதற்காகவோ அல்லது கட்சி வளர்ச்சிக்காகவோ வைத்திருந்தாலும் கூட அது மக்கள் மத்தியில் தவறாகவே சித்தரிக்கப்படுகிறது.
புதுவை மாநிலத்தில் நமது இயக்கம் எதனை நோக்கி பயணிக்கிறதோ அந்த இலக்கை அடைவதற்கு இந்த பேனர் கலாச்சாரம் பெரும் தடையாக இருக்கும் என்பதையும், என்னையும் புதுவை மக்களிடையே சராசரி விளம்பர அரசியல்வாதியாக காட்டிவிடும் என்பதையும் தி.மு.க.வினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், மரியாதை நிமித்தமாக எனக்கு சால்வை மற்றும் மாலை அணிவிப்பதை தவிர்த்து மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுத்தும் விதத்தில் புத்தகங்களை பரிசளிக்க தலைவர் கட்டையிட்டுள்ளதை பின்பற்ற வேண்டுகிறேன். பேனருக்கும், சால்வை மற்றும் மாலை போன்றவைகளுக்கும் செலவு செய்யும் தொகையை புத்தகங்கள் பரிசளித்தால் புதியதாக திறக்க இருக்கும் லாசுப்பேட்டை, நெல்லித்தோப்பு ஆகிய தி.மு.க அலுவலகங்கள் மற்றும் தொகுதிகள் தோறும் நூலகங்கள் அமைத்து மாணவர்களின் அறிவு வளர்ச்சி பெருக வழிவகுக்கும்.
ஆகவே, தி.மு..கவினர் மக்களை அச்சுறுத்தும் வகையில் பேனர் வைப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும். கட்சி கட்டுப்பாடுடன் நமது இலக்கை நோக்கிய பயணத்திற்கு ஒத்துழைப்பை தாருங்கள் என அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ அறிக்கையில் கூறியுள்ளார்.