புதுச்சேரி

கோப்பு படம்.

அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

Published On 2023-09-06 10:24 IST   |   Update On 2023-09-06 10:24:00 IST
  • எம்.பி.பி.எஸ், பல், ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • அரசின் 10 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

புதுச்சேரி:

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து முறைப்படி அரசாணை வெளியிடப்பட்டது. அதில், புதுவை யூனியன் பிரதேச அரசு நடத்தும் பள்ளியில் 1 முதல் பிளஸ்2 வரை படித்த மாணவர்களுக்கு மொத்த இடஒதுக்கீட்டில் 10 சதவீதம் கிடைமட்ட ஒதுக்கீடு தரப்படுகிறது. இந்த கல்வியாண்டு முதல் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்.பி.பி.எஸ், பல், ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். அதே சமயம் நீட் தேர்வில் வெற்றி பெறுவது தகுதியாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 10 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற சென்டாக்கில் இதுவரை விண்ணப்பிக்காத அரசு பள்ளி மாணவர்கள் வரும் 8-ம் தேதி காலை 10 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின் அரசின் 10 சதவீத ஒதுக்கீட்டீல் சேரும் விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. ஆனால் இணையதளம் சென்று அரசின் 10 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற விருப்பம் தெரிவிக்க வேண்டும். மேலும் பிளஸ்-2 வரை படித்த பள்ளி மாற்று சான்றிதழ், படிப்பு சான்றிதழ், வருவாய்த்துறை குடியுரிமை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொது, ஓ.பி.சி, எம்.பி.சி, இ.பி.சி, பி.சி.எம், பி.டி பிரிவினருக்கு கட்டணமாக ரூ.ஆயிரம், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.

Tags:    

Similar News