புதுச்சேரி

கோப்பு படம்.

மாணவிகள் போராட காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை

Published On 2023-06-16 14:30 IST   |   Update On 2023-06-16 14:30:00 IST
  • மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்
  • சுப்பிரமணிய பாரதியார் பள்ளியின் தற்போதைய துணை முதல்வரே மாணவிகளைக் கம்பன் கலையரங்கம் அருகே போராட்டம் செய்ய வைத்துள்ளார்.

புதுச்சேரி:

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 நாட்களாக புதுவை அரசுப் பள்ளிகளில் நடந்து வரும் பெற்றோர் மாணவர் போராட்டங்கள் அரசு பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் செயல்பாடுகளைக் கேள்விக் குறியாக்கியுள்ளன.

தற்போதுள்ள பிரச்சினை சென்ற ஆண்டு குருசுகுப்பம் என்.கே.சி மேனிலைப் பள்ளியில் நடந்த மாணவிகள் போராட்டத்தை கல்வித்துறை இணை இயக்குநர் சரியாக விசாரிக்காமலும் போராட்டத்தைத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும் வேறு ஒருவரை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதும் மாணவிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் மெத்தனமாக இருந்ததே காரணமாகும்.

சுப்பிரமணிய பாரதியார் பள்ளியின் தற்போதைய துணை முதல்வரே மாணவிகளைக் கம்பன் கலையரங்கம் அருகே போராட்டம் செய்ய வைத்துள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி அனுப்பும் போது ஒரு துணை முதல்வரே மாணவிகளைப் பள்ளியை விட்டு தூரமாக இருக்கும், போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில் போராட்டம் நடத்த வைத்திருப்பதும் அதை பள்ளிக் கல்வி இயக்குநரகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததும் வேதனையாக உள்ளது.

தொடரும் மாணவர்கள் போராட்டங்கள் அனைத்திற்கும் முழுக் காரணமான பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணை இயக்குநர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணை இயக்குநரைப் பதவி நீக்கம் செய்ய கோரி போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News