கோப்பு படம்.
மோட்டார் சைக்கிள்-செல்போனை திருடிச்சென்ற வாலிபர் சிக்கினார்
- சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் சாவி மற்றும் செல்போனை காணாமல் இருவரும் திடுக்கிட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் வயது 63) இவர் மீனவ அமைப்பின் முக்கியஸ்தராக இருந்து வருகிறார். இவரும் அப்பகுதியில் மீன் பிடி தொழில் செய்துவரும் மீனவர்களும் தேங்காய் திட்டு மீன் பிடி துறைமுக வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதன் சாவி மற்றும் சில உபகரணங்களை அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து விட்டு மீன் பிடி படகு மற்றும் வலைகளை சீர் செய்வது வழக்கம்.
அதுபோல் சம்பவத்தன்று கஜேந்திரன் தனது மோட்டார் சைக்கிள் சாவியையும், வடிவேல் என்பவர் அவரது செல்போனையும் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து விட்டு படகினை சீர் செய்தனர். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் சாவி மற்றும் செல்போனை காணாமல் இருவரும் திடுக்கிட்டனர்.
மேலும் கஜேந்திரனின் மோட்டார் சைக்கிளும் மாயமாகி இருந்தது. மர்ம நபர் யாரோ நோட்டமிட்டு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து கஜேந்திரன் முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது சிதம்பரம் முடசல் ஓடை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவா (34) என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.