புதுச்சேரி

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசிய போது எடுத்த படம்.

ரங்கசாமி ஆட்சி நீடித்தால் மேலும் 500 மதுபார் வரும்-நாராயணசாமி ஆவேசம்

Published On 2023-04-12 14:39 IST   |   Update On 2023-04-12 14:39:00 IST
  • புதுவையில் மது ஆறு ஓடுவதற்கு போலி சித்தர் ரங்கசாமிதான் காரணம். ஆன்மிக பூமியை தனது சுயநலத்திற்காக போதை பூமியாக மாற்றியுள்ளார்.
  • தற்போது ஒஸ்ட் புதுவையாக மாறியுள்ளது. அதிகாலை வரை மதுபார்களில் குத்தாட்டம் போடுகின்றனர்.

புதுச்சேரி:

புதுவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவையில் மது ஆறு ஓடுவதற்கு போலி சித்தர் ரங்கசாமிதான் காரணம். ஆன்மிக பூமியை தனது சுயநலத்திற்காக போதை பூமியாக மாற்றியுள்ளார். சாலைகளில் பொதுமக்கள் நடக்கவே பயப்படும் சூழல் உருவாகியுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் மது பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்- அமைச்சரை வந்து சந்திக்கின்றனர்.

அப்போது, இன்னும் 100 மதுபார் வரும் என ஆணவத்தோடு ரங்கசாமி கூறுகிறார். வருமானம் வேண்டும் என்பதற்காக மதுபார்களுக்கு அனுமதி தருவதாகவும் அவர் கூறுகிறார்.

மது வருவாயில் ஒரு ஆட்சி நடக்க வேண்டுமா? ஏற்கனவே 400 மதுபார்கள் புதுவையில் இருந்தது. தற்போது 900 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 40 பார்களுக்கு அனுமதி வழங்கும் கோப்பு முதல்- அமைச்சர் அலுவலகத்தில் உள்ளது.

ரூ.20 லட்சம் கொடுத்தால் நள்ளிரவு நடன பாருக்கு அனுமதி, ரூ.15 லட்சம் கொடுத்தால் விடுதிகளில் பார் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என பிரதமர் கூறினார். தற்போது ஒஸ்ட் புதுவையாக மாறியுள்ளது. அதிகாலை வரை மதுபார்களில் குத்தாட்டம் போடுகின்றனர். அதற்கு பிறகும் சாலைகளில் வந்து நடனமாடுகின்றனர்.

சுற்றுலா பயணிகளை கவர பீர் பஸ் விடுகிறார். அதில் குடித்துக்கொண்டே புதுவைக்கு வந்து குடித்தபடியே திரும்பி செல்வார்களாம். காவல்துறையை பொறுத்தவரை மாமூல் கொடுத்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. முதல்-அமைச்சருக்கு அவரின் நாற்காலி இருந்தால் போதும். போதை கும்பலால் இறந்த என்ஜினியர் என்ன கனவு கண்டிருப்பார்?

அவர் ஒரே பிள்ளை. அவரது தாயார் இழப்புக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமிதான் பொறுப்பேற்க வேண்டும். மதுபார் மட்டுமின்றி, 6 மதுபான தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்போகிறார்களாம். 2 ஆண்டு ஆட்சியில் 500 மதுபார் கூடியுள்ளது.

இன்னும் இந்த ஆட்சி நீடித்தால் இன்னும் 500 பார் புதிதாக வரும். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? இளைய சமுதாயத்தை அழிக்க ரங்கசாமி முற்பட்டுள்ளார்.ரெஸ்டோ பார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை செல்லவும் தயங்க மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News