வழிபாடு
மாசாணியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்து நின்று வழிபட்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை வழிபாட்டில் திரண்ட பக்தர்கள்

Published On 2022-04-01 10:32 IST   |   Update On 2022-04-01 10:32:00 IST
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வேண்டுதல் நிறைவேற மிளகாய் அரைத்து அம்மன் சிலையில் பூசும் வழிபாட்டிலும் பல பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

குறிப்பாக அமாவாசை தினங்களில் நடைபெறும் பூஜைகளில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். நேற்று பங்குனி மாத சர்வ அமாவாசை என்பதால் வழக்கத்தை விட அதிக பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபட்டனர்.

இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. காலை 6.30 மணிக்கு முதல் கால பூஜையும், 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 4.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 6.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது.

இந்த பூஜைகளில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை, திருப்பூர், மதுரை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்கள் வந்திருந்தனர்.

வேண்டுதல் நிறைவேற மிளகாய் அரைத்து அம்மன் சிலையில் பூசும் வழி பாட்டிலும் பல பக்தர்கள் கலந்து கொண்டனர். குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டும் வழிபாடு, திருமணம் தடை நீக்கும் வழிபாடுகளிலும் பலர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

பக்தர்கள் வருகை காரணமாக ஆனைமலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

Similar News