வழிபாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

Published On 2022-03-15 12:51 IST   |   Update On 2022-03-15 12:51:00 IST
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்த மாதம் பவுர்ணமி நாட்களான வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று வழிபாடு செய்வது வழக்கம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நீக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்தமாதம் (பங்குனி) பவுர்ணமி நாட்களான வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த கார்த்திகை மாத பவுர்ணமி நாட்களில் மட்டும் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தற்போதுதான் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே வருகிற பவுர்ணமி கிரிவல நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Similar News