தைப்பூச திருவிழா வடலூரில் ஜோதி தரிசனம் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
தைப்பூச திருவிழாவையொட்டி வடலூரில் ஜோதி தரிசனம்: 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
vadalur vallalar thai poosam Jyothi Darshan
vadalur vallalar, thai poosam, Jyothi Darshan, தைப்பூசம், வடலூர் வள்ளலார், ஜோதி தரிசனம்,
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் தைப்பூச திருவிழாவையொட்டி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 147-வது ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
காலை 7 மணியளவில் வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லத்திலும், தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி இல்லத்திலும், வடலூர் தர்மசாலையிலும் மற்றும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து மாலையில் தர்மசாலைமேடை, ஞானசபை மேடைகளில் கருத்தரங்குகள், சன்மார்க்க சொற்பொழிவுகள், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் சத்தியஞானசபையில் இன்று நடந்தது. காலை 6 மணி முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. பின்னர் 10 மணி, மதியம் 1 மணிக்கு 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
அதன்பின்பு இரவு 7 மணியும், 10 மணியும், நாளை(வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், காமராஜ், சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் பங்கேற்றனர். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வடலூரில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காணப்பட்டனர். ஜோதி தரிசன விழாவில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச திருவிழாவை யொட்டி கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஜோதி தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு தனியார் அமைப்புகளின் சார்பில் அன்னதானம் மற்றும் மோர் வழங்கப்பட்டது.
தைப்பூச விழாவை யொட்டி பக்தர்கள் வசதிக்காக அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, மதுரை, சேலம், நாமக்கல் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வடலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து சபை வளாகத்தில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது வேன், கார், மினி லாரிகளை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கழிப்பறை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
விழாவையொட்டி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட போலீசார், சிறப்பு காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.