செய்திகள்
விராட் கோலி

லீக் சுற்றில் 7 வெற்றிகளை பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை: விராட் கோலி

Published On 2019-07-07 10:45 GMT   |   Update On 2019-07-07 10:45 GMT
உலகக்கோப்பைக்கான 9 போட்டிகள் கொண்ட ராபின் ரவுண்டு லீக் சுற்றில் 7-ல் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
உலககோப்பை போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா 7-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பக்கு 264 ரன் எடுத்தது. முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 3-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 113 ரன்னும் (10 பவுண்டரி, 2 சிக்சர்), திரிமானே 53 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். பும்ரா 3 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 265 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சதத்தால் இந்திய அணி 265 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 94 பந்தில் 103 ரன்னும் (14 பவுண்டரி, 2 சிக்சர்), ராகுல் 118 பந்தில் 111 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வீராட்கோலி 34 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர்.

இந்தியா பெற்ற 7-வது வெற்றியாகும். இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

உலகக்கோப்பையில் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்த நாங்கள் விரும்பினோம். ஆனால் 7-1 என்ற கணக்கில் முடிவு அமையும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதாவது 7 ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது உண்மையிலேயே எனக்கு கிடைத்த கவுரவமாகும். இந்த அணியில் நானும் இடம் பெற்று இருப்பது அற்புதமானது.

அரையிறுதி சிறப்பாகவோ அல்லது மோமாகவோ அமையலாம். எது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் மோசமாக அமைவதை நாங்கள் விரும்பவில்லை. இதனால் எங்களது மற்றொரு சிறப்பான ஆட்டத்தை அரை இறுதியிலும் வெளிப்படுத்துவோம்.

அரையிறுதியில் எந்த அணியை சந்திப்பது என்பது வி‌ஷயமில்லை. நாங்கள் சிறப்பாக ஆடாவிட்டால் எந்த அணியும் எங்களை தோற்கடிக்கும். நாங்கள் சிறப்பாக ஆடினால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இந்த தொடரில் ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டு பணி முக்கியமானது. அவர் ஒரு அற்புதமான வீரர். அணியை மேம்பாடு அடைய வைப்பதில் சிறந்தவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News