செய்திகள்
சதம் அடித்த வார்னர்

வார்னர் 166 ரன்கள்: வங்காள தேசத்திற்கு 382 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

Published On 2019-06-20 13:24 GMT   |   Update On 2019-06-20 13:57 GMT
நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் வார்னர் 166 ரன்கள் விளாச வங்காள தேசத்திற்கு 382 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா - வங்காள தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 320-க்கு மேலான ரன்களை வங்காள தேசம் சேஸிங் செய்ததால், ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்யும் என எதிர்பார்த்தனர். ஆனால் பிஞ்ச் தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாவிடிலும், ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் வரும் வகையில் விளையாடினர். இதனால் ஆஸ்திரேலியா 9.3 ஓவரில் 50 ரன்னையும், 16.3 ஓவரில் 100 ரன்னையும் கடந்தது.


ஆரோன் பிஞ்ச்

டேவிட் வார்னர் 55 பந்திலும், பிஞ்ச் 47 பந்திலும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 20.5 ஓவரில் 121 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஆரோன் பிஞ்ச் 51 பந்தில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் வார்னர் உடன் உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார்.

அரைசதம் அடித்த பின் கவாஜா உடன் இணைந்து வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. டேவிட் வார்னர் 110 பந்தில் சதம் அடித்தார். இந்த உலகக்கோப்பையில் வார்னரின் 2-வது சதம் இதுவாகும். மறுமுனையில் கவாஜா 50 பந்தில் அரைசதம் அடித்தார்.

ஆஸ்திரேலியாவின் 44.2 ஓவரில் 313 ரன்களாக இருக்கும்போது வார்னர் 147 பந்தில் 14 பவுண்டரி, ஐந்து சிக்சர்களுடன் 166 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ருத்ர தாண்டவம் ஆடினார். மேக்ஸ்வெல் அதிரடியை பார்க்கும்போது ஆஸ்திரேலியா எளிதாக 400 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.


பந்தை பவுண்டரிக்கு விரட்டும் வார்னர்

ஆனால், மேக்ஸ்வெல் 10 பந்தில் 32 ரன்கள் குவித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். கவாஜா 72 பந்தில் 89 ரன்கள் எடுத்த நிலையில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ஆஸ்திரேலியா 49 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கீட்டது. மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. கடைசி ஓவரில் 13 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா ஒட்டுமொத்தமாக 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்துள்ளது.

பின்னர் 382 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் சேஸிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News