உலகம்

கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Published On 2023-09-22 14:29 GMT   |   Update On 2023-09-22 14:29 GMT
  • ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
  • ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுக்க இருக்கிறார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடிவருகிறார். உலக நாடுகளில் இருந்து ரஷியாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஐ.நா.வில் இன்னும் ரஷியாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், வெறுப்பு ஆயுதமாகும்போது, அது ஒரு நாடுடன் நிற்காது என்று எச்சரித்தார். இந்த கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்று இருக்கிறார். கனடா சென்று இருக்கும் அவர், அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றி, ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுக்க இருக்கிறார்.

2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியது. அதன்பிறகு தற்போது தான் ஜெலன்ஸ்கி முதன்முறையாக கனடா சென்றுள்ளார். கனடாவின் ஒட்டாவாவில் தரையிறங்கிய ஜெலன்ஸ்கியை கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்றார்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜெலன்ஸ்கி மற்றும் ட்ரூடோ டொரோண்டோ பயணம் மேற்கொண்டு அங்குள்ள உக்ரைன் மக்களை சந்திக்கின்றனர். உக்ரைனின் மொத்த மக்கள் தொகையில் நான்கு சதவீதம் பேர் தற்போது கனடாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பேசிய கனடாவுக்கான ஐ.நா. தூதர் பாப் ரே, "அவருக்கு உதவுவதற்காக பலவற்றை செய்து இருக்கிறோம், மேலும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. உக்ரைன் மக்களுக்காக எங்களால் முடிந்தவற்றை தொடர்ச்சியாக செய்யப் போகிறோம்," என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News