இந்தியா
null

சீனாவுடன் நெருங்கிய யூனுஸ்.. இந்தியா வழியாக வங்கதேச பொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை!

Published On 2025-04-09 19:28 IST   |   Update On 2025-04-09 19:29:00 IST
  • இந்த ரத்து உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களும் நிலத்தால் சூழப்பட்ட பகுதி.

வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டு வந்த TRANS SHIPMENT வசதியை நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

நேற்று (ஏப்ரல் 8) மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அதில், வங்கதேசம் தனது ஏற்றுமதி சரக்குகளை மூன்றாம் நாடுகளுக்கு, இந்தியாவில் உள்ள சுங்க நிலையங்கள் வழியாகவும், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் கொண்டு செல்ல அனுமதித்த 2020 ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரத்து உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் வங்கதேசம், இந்தியா வழியாக பூட்டான், நேபாளம் மற்றும் மியான்மருக்கு இதுவரை வர்த்தகத்தை மேற்கொண்டு வந்தது.

ஆனால் ஒப்பந்தம் கைலயெழுத்தான 2020 முதலே இந்திய ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக ஆடைத் துறையில், இந்த ஏற்பாட்டை நீண்ட காலமாக எதிர்த்தனர். டிரான்ஸ்-ஷிப்மென்ட் -இன் கீழ் வங்கதேச பொருட்கள் இவ்வாறு இந்தியா வந்து செல்வதால் சுங்க நிலையங்களில் தங்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதாக அவர்கள் வாதிட்டனர். இந்நிலையில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த ரத்து வங்கதேசத்தில் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். முந்தைய வழிமுறையில், இந்தியா வழியாக ஒரு நெறிப்படுத்தப்பட்ட பாதை இருந்தது, போக்குவரத்து நேரம் மற்றும் செலவு குறைந்தது. ஆனால் இப்போது, அது இல்லாமல், வங்கதேச ஏற்றுமதியாளர்கள் தாமதம் மற்றும் அதிக செலவை எதிர்கொள்வார்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் சீனாவுக்கு வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் சீனாவிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டார்.

அங்கு பேசிய அவர், "இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களும் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அவர்கள் கடலை அடைய எந்த வழியும் இல்லை, இந்த பிராந்தியத்தில் வங்கதேசம்தான் "கடலின் ஒரே பாதுகாவலர்" என்று தெரிவித்தார்.

இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார். சீனாவில் யூனுஸ் பேச்சுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

Tags:    

Similar News