உலகம்

ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தினால் ஆயுத உதவியை நிறுத்துவோம்- ஜோபைடன் எச்சரிக்கை

Published On 2024-05-09 05:20 GMT   |   Update On 2024-05-09 05:20 GMT
  • ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் அங்கு டாங்கிகளை குவித்துள்ளது.
  • இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

வாஷிங்டன்:

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் வடக்கு மற்றும் மத்திய காசா பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவின் ரபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் அங்கு டாங்கிகளை குவித்துள்ளது.

இதற்கிடையே ரபா நகரம் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அகதிகளால் மக்கள் தொகை பெருகியிருக்கும் ரபா நகரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால், பொது மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும் என்று தெரிவித்தது.

மேலும் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த நிலையில் ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தினால் ஆயுத உதவிகளை நிறுத்துவோம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தெற்கு காசா நகரமான ரபாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை நடத்தினால் அந்நாட்டுக்கு ஆயுத உதவிகளை நிறுத்துவோம். நாங்கள் ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வழங்கப் போவதில்லை.

ஹமாசுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலில் பயன்படுத்த ஆயுதங்களை வழங்கமாட்டோம். ரபாவின் தற்போதைய நிலைமையை தரைப்படை நடவடிக்கையாக அமெரிக்கா வரையறுக்கவில்லை. அவர்கள் (இஸ்ரேல்) மக்கள்தொகை மையங்களுக்குள் செல்லவில்லை.

ஆனால் நான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கும், போர் அமைச்சர வைக்கும் ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளேன். அவர்கள் மக்கள்தொகை மையங்களுக்குச் சென்றால் எங்களின் ஆதரவைப் பெறப் போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காசாவில் பொது மக்களை கொல்ல அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியதை ஜோபைடன் ஒப்புக் கொண்டார்.

Tags:    

Similar News