உலகம்

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்தது நாங்கள் தான்: லஷ்க்-இ-தொய்பா அமைப்பு

Published On 2025-06-01 17:04 IST   |   Update On 2025-06-01 17:04:00 IST
  • மே 11-ந் தேதி மட்டும் நீங்கள் (இந்தியா) தாக்கியிருந்தால் நாங்களும் பதிலுக்கு உங்களை தாக்கியிருப்போம்.
  • ஷேக் ஹசீனா அரசு இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்புடன் செயல்பட்டு வந்தது.

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.

இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்தது நாங்கள்தான் என்று லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தெரிவித்துள்ளது.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய ஜமாத்-உத்-தாவா அமைப்பைச் சேர்ந்த சைபுல்லா கசூரி மற்றும் ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட முசம்மில் ஹாஷ்மி ஆகியோர் ரஹீம் யார் கான் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது முசம்மில் ஹாஷ்மி பேசும் போது, "கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்து நாங்கள் தோற்கடித்தோம். இது இந்திய பிரதமர் மோடிக்கு நன்கு தெரியும்.

மே 11-ந் தேதி மட்டும் நீங்கள் (இந்தியா) தாக்கியிருந்தால் நாங்களும் பதிலுக்கு உங்களை தாக்கியிருப்போம். மே 7-ந்தேதி இரவில் தாக்குதல் நடத்தினீர். ஆனால் மே 10-ந் தேதி நாங்கள் காலை வேளையில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் உங்களுக்கு பதிலடி கொடுப்போம். கொடுத்து கொண்டிருக்கிறோம். நீங்கள் போர்க்களத்துக்கு வந்தால் நாங்களும் போர்க்களத்துக்கு வருவோம்" என்றார்.

வங்காளதேசத்தில் இருந்த ஷேக் ஹசீனா அரசு இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்புடன் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே ஷேக் ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டது.

இதில் பாகிஸ்தானின் சதி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு நாங்கள்தான் காரணம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News